பிரித்தானிய முதலீடுகள் இந்தியாவால் வரவேற்பு
பிரித்தானியாவின் முதலீடுகளை வரவேற்பதாக பொறிஸ் ஜோன்சனுடனான சந்திப்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போர் விமான தயாரிப்பு தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் பிரித்தானியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பை அடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானியா - இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த பொறிஸ் ஜோன்சன் பல நடவடிக்கை எடுத்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதமர் பொறிஸ் ஜோன்சன், நரேந்திர மோடியுடன் சிறந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
அனைத்து வகையிலும் இருதரப்பு உறவை பலப்படுத்தியுள்ளோம் எனவும், உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனில் உடனடிப் போர்நிறுத்தம் மற்றும் போர் பிரச்சினைக்குத் தீர்வுகாண பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தினோம் எனவும் பிரித்தானிய பிரதமர் கூறியுள்ளார்.
