அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை கொண்டுவந்தார் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் இன்று முக்கியமான மாற்றங்களை செய்துள்ளார்.
இந்த மாற்றத்தில் கல்வி அமைச்சர் கெவின் வில்லியம்சன், நீதியமைச்சர் றொபேர்ட் பக்லேண்ட், சமூக வீட்டுத்துறை அமைச்சர் ரொபேர்ட் ஜென்ரிக் ஆகியோரின் பொறுப்புகள் பறிக்கப்பட்டு அரசாங்கத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல ஆப்கானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் மற்றும் மக்களை மீட்கும் நடவடிக்கையில் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடமிருந்து அந்த துறை எடுக்கப்பட்டு அவருக்கு நீதியமைச்சகம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர் துணைப் பிரதமராகவும் நியமிக்கபட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் முதல் நியமிக்கப்பட்டுவரும் நிலையில் இராஜாங்க அமைச்சகத்தின் மாற்றங்கள் மற்றும் நியமனங்கள் நாளை வரை தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் இந்த அமைச்சரவை மாற்றங்கள் ஆளும் கட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.