நல்லூர் திருட்டு சம்பவங்கள்: 15 வயது சிறுவன் உட்பட ஐவர் கைது!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர் உற்சவத்தில் தங்க நகைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டு ஆண்டுகளின் பின்னர் நல்லூர் கந்தனின் தேர்ப் பவனி நேற்று இடம்பெற்றது. இதனால் அதிகளவான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.
கோயிலில் உள்ள சன நெரிசலை சாதகமாக்கி பல திருட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன.
30 பவுண் நகைகள்
இந்நிலையில், நல்லூர் உற்சவகாலப்பகுதிகளில் 2 தாலிக் கொடி மற்றும் சங்கிலிகள் உட்பட்ட 30 பவுண் நகைகள் களவாடப்பட்டன என்று நல்லூர் உற்சவகால காவல்துறை காவலரணில் 7 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் ஒரு சிறுவன் மற்றும் 4 பெண்கள் உட்பட 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் ஒருவர் சங்கிலி அறுக்க முற்பட்டபோது கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நீர்கொழும்பைச் சேர்ந்த மேலும் 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
15 வயது சிறுவன் கைது
மேலும் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கோப்பாயைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.