பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்ட பிரித்தானிய பிரதமர் சுனக்
தொழிற்கட்சியுடனான தோல்வியை தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரித்தானிய பிரதமருமான ரிஷி சுனக் (Rishi Sunak) தனது கட்சி உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் சுனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் (British) மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தோல்வியை ஏற்றுக்கொண்ட சுனக்
அதனை தொடர்ந்து, தோல்வியை ஏற்றுக்கொண்ட சுனக், தொழிற்கட்சி பெரும்பான்மை இடங்களை வென்றது என்று அறிவிக்கப்பட்டவுடன் தலைவர் கெய்ர் ஸ்டார்மருக்கு (Keir Stamer) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் ரிசி சுனக் கூறுகையில், “தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. நான் ஸ்டார்மரை அழைத்து வாழ்த்து தெரிவித்தேன். தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன். என்னால்தான் தேர்தலில் தோற்றது. அந்த பொறுப்பை நான் ஏற்கிறேன்” என கூறியுள்ளார்.
மன்னருக்கு அறிவிப்பு
இதேவேளை, கட்சித் தலைமையை விட்டு விலகத் தயாராக இருப்பதாகவும் சுனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரித்தானிய பாரம்பரியத்தின் படி, தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகு, ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் மன்னரிடம் சென்று அதனை அறிவிக்கவேண்டும்.
அத்துடன், தேர்தலில் வெற்றி பெற்ற கெய்ர் ஸ்டார்மர், மன்னன் சார்லஸைச் சந்தித்து புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று அறிவிப்பார். இதன் படி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |