தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவருக்கு பிரித்தானிய தமிழர் பேரவை இரங்கல்
தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், அவருக்கு பல சவால்களும் நெருக்கடிகளும் கட்சிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கொடுக்கப்பட்ட போதிலும், தமிழ்த் தேசியத்தின்பால் தன்னை நிலை நிறுத்திச் செயற்பட்டமை மாவை சேனாதிராஜாவின் சிறப்பு என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினறுமான மாவை சேனாதிராஜாவின் மறைவிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், தலைவராகவும், 1960களிலிருந்து ஈழத் தமிழ் மக்கள் போராட்டங்களில் முன்னணியிலிருந்து செயல்பட்டவரான மாவை சேனாதிராஜா ஐயா அவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்து கொள்கின்றோம்.
ராஜதந்திரப் போராட்டம்
இவர் சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், மற்றும் முள்ளிவாய்க்காலிற்கு பிந்திய அரசியல் ராஜதந்திரப் போராட்டம் என்கின்ற மூன்று முக்கியமான காலகட்டங்களிலும் தொடர்ச்சியாகச் செயல்பட்ட ஒரு தமிழ் தேசியவாதி ஆவார்.
மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில், அவருக்கு பல சவால்களும் நெருக்கடிகளும் கட்சிக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கொடுக்கப்பட்ட போதிலும், தமிழ்த் தேசியத்தின்பால் தன்னை நிலை நிறுத்திச் செயற்பட்டமை இவரது தனித்துவ சிறப்பாகும்.
இவர் 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962இல் இணைந்தார். 1966 - 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார். 1969 1983 வரையான காலப் பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1972இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தேசியப் பட்டியல்
அன்னார் 1989இல் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2000ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.
2004, 2010, 2015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஒரு பண்பான மனிதராக, தலைவர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், தனது அன்பான அரவணைப்பால் அனைவரையும் ஒன்றிணைத்து பயணித்ததவர்.
பிரித்தானியா தமிழர் பேரவையைப் பொறுத்தவரையில், புலம்பெயர் வாழ் தமிழர்களினதும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களினதும் ஒருங்கிணைந்த வேலைத் திட்டங்களும், அவற்றை குறித்த காலத்தில் வெற்றிகரமாகச் செயற்படுத்துவதும்தான் தமிழ் தேசிய வேணவாவை வென்றெடுக்கும்.
தமிழ் தேசியம்
நீண்ட வரலாற்றுப் போராட்டத்தின் அடுத்த படிநிலைக்கு எங்களை இட்டுச் செல்லும் என்ற திடமான கருதுகோளின் அடிப்படையில், தமிழ் மக்களின் திரட்சியை ஏனைய சகோதர அமைப்புகளுடன் இணைந்து செயல்பாட்டு தளத்தை விஸ்தரிக்கும் போது, மாவை சேனாதிராஜா அவர்கள் தன்னுடைய சக்திக்கு உட்பட்டு, இயன்ற ஒத்துழைப்புகளை செய்து ஆதரவளித்தார்.
மாவை சேனாதிராஜா அவர்களது இழப்பு என்பது அவருடைய முயற்சிக்கும், எங்கள் எல்லோரின் விருப்பத்திற்கும் ஏற்ப தமிழ் தேசத்தின் திரட்சியை தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உருவாக்க வேண்டும்.
தமிழ் மக்கள் திரண்டெழுந்து வருவதற்குரிய தடைகள் இனங் காணப்பட்டு, அத் தடைகள் அகற்றப்பட்டு, ஒரு பொதுப் புள்ளியில் எல்லோரும் ஒன்றிணைவதற்கான, தமிழ் தேசியத்தைப் பலப்படுத்துவதற்கான ஒரு திரட்சியை, குறிப்பாக தாயகத்தில் தமிழ் மக்களின் திரட்சியை நாம் உருவாக்குவதற்கான முயற்சிகளை மாவை சேனாதிராஜா அவர்களின் இழப்பிலிருந்து உருவாக்குவோம்.
தமிழ் மக்களின் போராட்டத்தில் முக்கியமான இன்றைய காலகட்டத்தில் 'வேற்றுமையில் ஒற்றுமை' (Unity in Diversity) காண விரும்பிய மாவை சேனாதிராஜா அவர்களின் நினைவுகளை முன்னிறுத்தி இன்னொரு அத்தியாயம் ஆரம்பிப்போம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |