16 மாணவிகளை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய 30 வயது ஆசிரியர் - வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்
களுத்துறை மாவட்டத்தில் 16 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்ட ஆசிரியர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை வடக்கு காலி வீதியிலுள்ள இடமொன்றில் கணித ஆசிரியராக வகுப்புகளை நடாத்திய இவர், சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தும் போது அனைத்தையும் கைத்தொலைபேசியில் பதிவு செய்து மடிக்கணினியில் சேமித்து வைத்துள்ளார்.
வெளிவரும் உண்மைகள்
இதனிடையே, ஆசிரியருக்கு தகாத தொடர்பு இருப்பதாக சந்தேகித்த அவரது சட்டத்தரணி மனைவி, களுத்துறை வடக்குப் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், சந்தேகநபரின் மடிக்கணினியை இரகசியமாகப் பரிசோதித்துள்ளார்.
இதன் போது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் காட்சிகளைக் கண்டு, சிறுமிகளின் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இந்த சம்பவம் முதன்முறையாக தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபரின் பதிவான காட்சிகளுக்குகமைய, 16 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெளிவாகத் தெரியவருவதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிகளைக் கண்டுபிடித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய ஆசிரியர் குழுக்களாக வகுப்புகளை நடத்தியுள்ளார் மேலும் சம்பந்தப்பட்ட சிறுமிகளை எவ்வாறு வன்புணர்விற்கு உட்படுத்தினர் என்பதைக் கண்டறிய காவல்துறையினர் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
zoom தொழில்நுட்பம்
மேலதிக விசாரணையில், சந்தேகநபர் வகுப்புகளுக்குப் பிறகு மாணவிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது காரில் ஏற்றிச் சென்று, காட்டுப் பகுதியில் உள்ள வெறிச்சோடிய பகுதிகளில் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சில சிறுமிகளின் பெற்றோர் வீட்டில் இல்லாத போது, ஆசிரியர், zoom தொழில்நுட்பம் மூலம் சிறுமிகளை தொடர்பு கொண்டு, சிறுமிகளை ஆடைகளை கழற்றச் சொல்லி, காட்சிகளை கூட பதிவு செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரால் வன்புணர்விற்கு உள்ளான சிறுமிகளில் களுத்துறை பிரதேச காவல் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் அடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இது தொடர்பில் களுத்துறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
