போதை வியாபாரியான அண்ணன் சிறையில் : பார்க்க வந்த தம்பி ஹோட்டலில் கைது
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப் பொருள் வியாபாரியான சகோதரனை பார்வையிடுவதற்காக கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு சென்று அங்கு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இளைய சகோதரன் உட்பட இருவரை நேற்று புதன்கிழமை (29) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
கடந்த ஏப்ரல் 7ம் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் வியாபாரியான அண்ணன் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்
நீர்கொழும்பு சிறை கலவரத்தை அடுத்து மாற்றப்பட்ட கைதிகள்
குறித்த சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அங்கிருந்து குறித்த போதை வியாபாரி உட்பட 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் சகோதரனை பார்வையிட அவரது தம்பியும் அவரின் நண்பன் என இருவரும் கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு சென்று கல்லடி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் மட்டு தலைமைய காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து காவல் நிலைய போதை ஒழிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சம்பவ தினமான நேற்று இரவு குறித்த ஹோட்டலை முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.
ஹோட்டலில் தங்கியிருந்த சகோதரன் போதைப்பொருளுடன் கைது
இதன்போது அங்கு அறையில் இருந்த தெமட்ட கொட பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடைய இருவரை 100 மில்லிகிராம் ஹெரோயின் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்தனர்

இதில் போதைப் பொருள் வியாபாரியின் சகோதரன் ஏற்கனவே போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டு கடந்த ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் போதைப்பொருள் வியாபாரிகள் எனவும் இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |