ஆப்கான் மருத்துவமனை அருகே கொடூர தொடர் குண்டுத்தாக்குதல்! 19பேர் உடல் சிதறிப்பலி
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனை அருகே அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்துச சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடந்துள்ளதாகவும் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
குண்டு வெடிப்பு தாக்குதலில் சிக்கி 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் சிலரது நிலைமை கவலைக்கு இடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படையினர் வெளியேறியதை தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. சில கிளர்ச்சியாளர்களும் குழுக்களும் தலிபான்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.