லால் காந்தவின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து...! வெடிக்கவுள்ள பாரிய போராட்டம்
விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்தவிற்கு (K.D. Lal Kantha) எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்குமாறு வலியுருத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்விடயத்தை தேசிய விவசாயிகள் அமைப்பின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திச் சட்டம்
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், விவசாய அபிவிருத்திச் சட்டத்தை மீறி நெற்பயிரச்செய்கை நிலங்களை (கும்பூர்) ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக அனுராதா தென்னகோன் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி நெல் நிலங்களை நிரப்புவதோ அல்லது வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையான பிரச்சினை
இவ்வாறான நிலையில் மக்காச்சோள (Maize) விதைகளை இறக்குமதி செய்யும் பெரு அளவிலான தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இத்தகைய செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்த அவர், விவசாயிகளின் உண்மையான பிரச்சினைகளை அடையாளம் காணாமல் அவர் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டு வருவதாகவும் ஊடகங்களுக்கு முன்னால் பொய் தகவல்களைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு லால் காந்தவை விவசாய அமைச்சர் பதவியிலிருந்து விலகும் வரை அல்லது அரசாங்கம் அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் வரை நாம் வரும் வெள்ளிக்கிழமை முதல் புதிய வடிவிலான போராட்டத்தைத் தொடங்கவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய சமூகத்தின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்படும் இந்த போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிட மாட்டோம் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |