SLS சான்றிதழ் இல்லாமல் நீட்டிப்புக் கம்பிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்
லங்கை தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய SLS தரச்சான்று இலச்சினை இல்லாத மின் நீட்டிப்பு வயர்களை (Extension Cords) விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் வர்த்தக பண்டாரவளை பகுதியிலுள்ள நிறுவனமொன்றுக்கு ரூ. 400,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகளால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கட்டாய SLS தரச்சான்று தேவைப்படும் மின் நீட்டிப்பு வயர்கள் SLS இலச்சினை இன்றி 2,790 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது.
4 இலட்சம் ரூபாய் அபராதம்
மேலும், குறித்த பொருட்களுக்கு குறைந்தபட்ச உத்தரவாதக் காலத்தை வழங்காமை மற்றும் வழங்குநர்களிடமிருந்து பெறப்பட்ட சட்டபூர்வ பற்றுச்சீட்டுகள் இன்றி பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை தொடர்பிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

நீதிமன்றத்தில் குறித்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு 4 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கட்டாய SLS தரச்சான்று பெற வேண்டிய மின் உபகரணங்கள்
2017 டிசம்பர் 7ஆம் திகதி வெளியிடப்பட்ட 2048/39 இலக்க அதிவிசேட வர்த்தமானியின் 63ஆம் கட்டளையின் கீழ், 250 வோல்ட்டுக்கு மேற்படாத சில மின் உபகரணங்களுக்கு கட்டாய SLS தரச்சான்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, Plugs, Socket Outlets, Extension Cords, Adaptors, Fused Connection Units, Conversion Plugs மற்றும் Cable Reels ஆகியவற்றுக்கு SLS தரச்சான்று இருப்பது கட்டாயமாகும்.
மின் விபத்துகள் மற்றும் தீ விபத்துகளைத் தவிர்க்கும் வகையில், இவ்வாறான மின் உபகரணங்களை வாங்கும்போது அவற்றில் SLS தரச்சான்று இலச்சினை மற்றும் உத்தரவாதக் காலம் உள்ளதா என்பதை பரிசோதிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும்போது சட்டபூர்வமான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |