வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை (11.09.2026) காலை 9.00 மணியளவில் கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக ஆரம்பமாகவுள்ளது.
இதனை முன்னிட்டு நாளை காலை 7.00 மணியளவில் விசேட யாக பூசைகள் இடம்பெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று, காலை 9.00 மணியளவில் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.
கணபதீசுவரக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்களால் விசேட பூசை நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
விழா நடவடிக்கைகள்
பெருந்திருவிழாவின் ஆரம்ப நாட்களில் சக்கரத்து ஆழ்வார் உள்வீதி உலா இடம்பெறுவதுடன், ஏழாம் திருவிழாவிலிருந்து வெளிவீதி உலாவும் இடம்பெறவுள்ளது.

இம்முறை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக, 17.09.2026 அன்று எட்டாம் திருவிழாவில் குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 19.09.2026 அன்று ஒன்பதாம் திருவிழாவான வெண்ணைத் திருவிழாவும், 20.09.2026 அன்று பத்தாம் திருவிழாவான துகிலியுத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.
அத்துடன், 21.09.2026 அன்று பதினொன்றாம் திருவிழாவான கம்சன் போர் திருவிழாவும், 23.09.2026 அன்று பதின்மூன்றாம் திருவிழாவான வேட்டைத் திருவிழாவும், 24.09.2026 அன்று பதினான்காம் திருவிழாவான சப்பரத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
தொடர்ந்து, 25.09.2026 அன்று பதினைந்தாம் திருவிழாவான தேர்த்திருவிழாவும், 26.09.2026 அன்று பதினாறாம் திருவிழாவான சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளதுடன், 27.09.2026 அன்று பதினேழாம் திருவிழாவான கேணி/பட்டுத் தீர்த்தத் திருவிழாவுடன் கொடியிறக்கமும் இடம்பெறவுள்ளது.
விசேட ஏற்பாடுகள்
பெருந்திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை முன்னெடுத்துள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேவேளை, திருவிழாவுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் தேவையான வசதிகளை வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.
பக்தர்களின் போக்குவரத்து தேவைகளை கருத்திற்கொண்டு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை மற்றும் தனியார் போக்குவரத்து சேவை சங்கங்கள் மேற்கொள்ளவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |