முடிவுக்கு வரும் பிக்குகளின் சத்யாகிரகப் போராட்டம்: நீதிமன்றத்தை நாடும் காவல்துறை
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பிக்குகள் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் சத்யாகிரகப் போராட்டத்தைக் கலைப்பதற்கான உத்தரவைப் பெற காவல்துறையினர் மீண்டும் நீதிமன்றத்தை நாட ஆயத்தமாகி வருவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பை வழங்குமாறு வலியுறுத்தி விகாரமகாதேவி பூங்காவில் சத்யாகிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே கணிசமான இடையூறுகளை ஏற்படுத்தி வரும் இந்த போராட்டத்தால் பொது அமைதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் குறித்து ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கவலை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியான பிரசன்னம்
குறித்த தகவல்களின்படி, போராட்டக்காரர்களின் தொடர்ச்சியான பிரசன்னத்தால் தூண்டப்படும் மேலதிக குழப்பங்கள் ஏற்படும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சமீபத்திய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூங்காவில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு போராட்டக்காரர்கள் கொழும்பு மாநகர சபையிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்பு அவ்விடத்திற்கு அருகே ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அனுமதியின்மை பூங்காவில் இளைப்பாற விரும்பும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்தநிலையில் போராட்டங்கள் தொடர்ந்தால் வன்முறை வெடிக்க அதிக வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நம்பிக்கை
பூங்கா நிலத்தை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதற்காகக் கடந்த திங்கட்கிழமை காவல்துறையினர், நீதவான் நீதிமன்ற உத்தரவொன்றைப் பெற்றிருந்த போதிலும் போராட்டக்காரர்களைக் கைது செய்வதற்கான பிடியாணையை நீதிமன்றம் இதுவரை வழங்க மறுத்ததால் அக்குழுவினர் தொடர்ந்து அங்கு தங்கியுள்ளனர்.
இந்நிலையில், பூங்காவில் தங்கியிருப்பவர்களின் பெயர் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர்களை கைது செய்வதற்கான பிடியாணையைப் பெற காவல்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

அத்தோடு, முந்தைய நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்தமைக்காக அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புச் (Contempt of Court) சாட்டப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் நாளைய தினத்திற்குப் பிறகு இப் போராட்டக்காரர்களால் அங்கு தொடர்ந்து தங்கியிருக்க முடியாமல் போகும் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஒரு சிறிய குழுவினர் பூங்காவின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து மக்களைத் திரட்டி வருவது தொடர்பாக கொழும்பு மாநகர ஆணையாளரால் குருந்தவத்தை (Kurunduwatte) காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |