பிள்ளையார் ஆலயத்தில் குடியேறிய புத்தர்!! தமிழர் பகுதியில் திடீர் பதற்றம் ( Video)
திருகோணமலை - மூதூர் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பிள்ளையார் சிலைக்கு மேல், புத்தர் சிலையொன்று இனந்தெரியாதவர்களினால் வைக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால், இன்று குறித்த பகுதியில் சற்று பதற்றநிலை தோன்றியுள்ளது.
இந்து ஆலயத்தில் இனந்தெரியாத விசமிகளால் நேற்று முன்தினம் இரவு புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மூதூர் பிரதேச இந்துக் குருமார்களால் அவ்விடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் வைக்கப்பட்ட அச் சிலையானது மூதூர் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.
எனினும் 64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மூதூர் பிரதேச இந்துக் குருமார்களும், பொதுமக்களும் ஆர்ப்பாட்டம் செய்ய முற்பட்டபோது மூதூர் கொட்டியாராம விகாராதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்தபோது சற்று பதற்ற நிலையும் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.
64 ஆம் கட்டை மலையடி பிள்ளையார் ஆலயமானது பல வருடகாலமாக அருகிலுள்ள கிராம மக்களானாலும், திருகோணமலை - மட்டக்களப்பு வீதியூடாக பிரயாணம் செய்கின்ற பொதுமக்களாலும் வழிபாடு செய்யப்படுகின்ற ஆலயமென்பதும் குறிப்பிடத்தக்கது.
அவ்விடத்தில் தொடர்ந்தும் இந்துக் குருமார்களும் ,பொதுமக்களும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியபோதும் குறித்த புத்தர் சிலையானது யாரால் வைக்கப்பட்டதென்று தெரியாது. இது தொடர்பாக விசாணைகளை மேற்கொள்ளவுள்ளோம் என மூதூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.