வடக்கு கிழக்கில் தலைவிரித்தாடும் பௌத்த மேலாதிக்கம் - அரசியல் உரிமைச் சட்டம் பாயாதது ஏன்...!
ஒரு நகைச்சுவை கலைஞரை சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யும் அரசாங்கம் வடக்கு கிழக்கில் பௌத்த ஆக்கிரமிப்புக்ளை செய்வோருக்கு எதிராக இச்சட்டத்தைப் பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வியை பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அருளிங்கம் சுவஸ்திக்கா எழுப்பியுள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டகாரர்களால் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மதங்களை அவமதித்தமை
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்திற்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டு எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து, இழிவுபடுத்தி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.
பௌத்த பாடசாலைகள் குறித்தும் அவர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார்.” என இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடியுரிமை அமைப்பு காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்ததற்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டார்.
மதங்களுக்கிடையில் பிரச்சினை
மேலும், இவர் அரசியல் உரிமை சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இச்சட்டம் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டத்தின் கீழ் பல சிறுபாண்மை இனத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், எந்தவொரு அரசாங்கமும் மக்களை பாதுகாப்பதற்காக ICCPR சட்டத்தின் 3ஆவது பிரிவை பயன்படுத்தியதில்லை.
குறிப்பாக வடக்கு, கிழக்கில் நடைபெறும் இந்து, இஸ்லாமியர்களுக்கு எதிரான பௌத்த ஆக்கிரமிப்புக்களை செய்பவர்கள் எவரும் இச்சட்டத்தின் கீழ் இதுவரையில் கைது செய்யப்பட்டதில்லை.
அதுபோன்று, திகன கலவரத்திற்கு காரணமான நபரைக் கூட இச்சட்டத்தில் கைது செய்யவில்லை.
இன, மதங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தவே அரசாங்கம் முயல்கிறது.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பதை திசைத் திருப்ப ICCPR சட்டத்தை பயன்படுத்துகின்றனர்” என்றார்.