இது தான் நிலைமை - சிறிலங்காவில் என்ன விதிசெய்வாய் தமிழா!
மணிமுடியையும் மன்னராட்சியையும் துறந்து சந்நியாசம் பூண்ட புத்தரின் பின்பற்றல்கள் மணிமுடியிலும மன்னராட்சியிலும் பெருவிருப்பம்கொண்டு அதற்காகத் தவம் கிடக்கின்றனர்.
நாட்டைத்துறந்து துறவு பூண்ட புத்தரின் போதனைகளைத் தினம் சொல்லும் புத்த பிக்குகள் பிற சமயத் தலங்களையும், நிலங்களையும் தமதாக்கும் கைங்கரியத்தில் ஓயாது இயங்குகின்றனர்.
10 கட்டளைகளையும் பெருமைக்குச் சொல்லும் சிங்கள பௌத்தர்கள் எந்தப்போதனைகளையும் பின்பற்றுவதும் இல்லை.
பௌத்த மேலாதிக்கம்
ஜனனாயக சோசலிசக் குடியரசு பெயருக்கு மட்டும் வைத்திருக்கும் இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கமே தலைவிரித்தாடுகின்றது.
சைவ ஆலயங்கள் இடிக்கப்படுகின்றது, தெய்வச் சிலைகள் உடைக்கப்படுகின்றது, பல்லாண்டுகளாக வழிபட்ட ஆலயங்களில் வழிபாடு தடுக்கப்படுகின்றது. பாரம்பரிய சைவ ஆலயங்கள் தொல்பொருள் எனும்பெயரில் தினம் தினம் அபகரிக்கப்படுகின்றது. புராதன சைவ ஆலயங்கள் மண்ணோடு மண்ணாக்கப்படுவதுடன் அவ்விடத்தில் வானுயர்ந்த விகாரைகள் கட்டப்படுகின்றது.
ஒற்றைப்பௌத்த சிங்களக்குடிமகனும் இல்லாத பாரம்பரிய தமிழர் நிலத்தில் விகாரைகள் கட்டப்படுகின்றது.
குடிக்கு ஒரு கெடுதிவந்தால் தெய்வத்திடம் வேண்டலாம் ஆனால் தெய்வத்திற்கே சோதனைவந்தால் யார்தான் என்னசெய்யமுடியும்.
சர்வதேசச் சட்டங்களை குழிதோண்டிப்புதைத்து விட்டு முள்ளிவாய்காலில் கோரத்தாண்டவம் ஆடிய பௌத்த சிங்களத்தை உலகநாடுகள் தட்டிக்கேட்கவும் இல்லை - தடுக்கவும் இல்லை.
யாரிடம் நீதிகேட்க முடியும்?
மனித உரிமைகள் என்னவிலை எனக்கேட்கும் இந்த நாட்டில் யாரிடம் யார் நீதிகேட்கமுடியும்? நீதி என்ற சொல்லின் அர்த்தம் புரியாத நாட்டில் எது நீதியாக இருக்கமுடியும்.
காணமல் ஆக்கப்பட்டோருக்கு யார் நீதி தருவார்? அநியாயமாகக் கொல்லப்பட் பச்சிளம் பாலகர் முதல் பொல்லுடன் நடந்த முதியவருக்கும் யார் நீதி கொடுப்பார்கள், பாலியல் வன்புணர்வு செய்து வக்கிரக் கொலைகளுக்கு இந்த நாட்டின் நீதிப்புத்தகத்தில் என்ன தண்டனை உள்ளது?
பாட்டன் பூட்டன் காலம் முதல் தமிழ்குழவி புரண்டுவிளையாடிய நிலம் இன்று இராணுவத்தின் கையில், படையினர் இரும்புவேலிக்குள்.
இந்த நிலையில் இங்கு ஏது நல்லிணக்கம்? எங்கும் அடக்குமுறை எல்வாற்றிலும் மேலாதிக்கம். ஒவ்வொரு அடிப்படைத் தேவைக்கும் தமிழன் போராடியே ஆகவேண்டும் எனும் நிலை, மக்கள் போராட்டம் பயங்கரவாதச்சட்டம் கொண்டு ஒடுக்கப்படும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் வழியிலேயே போராடும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்ட்டுள்ளனர்.
போராடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இங்கு சிறப்புரிமையும் இல்லை - பாதுகாப்பும் இல்லை. நிலத்தில் வாழ முடியவில்லை, கடலில் தொழில் செய்யமுடியவில்லை, வீதியில் நடமாடமுடியவில்லை, காட்டில் பயணிக்கமுடியவில்லை, ஆலயத்தில் வழிபடமுடியவில்லை என இந்த நாட்டில் தமிழர்களுக்கு இல்லை...... இல்லைகள் மட்டுமே இருக்கின்றது.
அகிம்சை தோற்றது, ஆயுதமும் மௌனித்தது, உடன்பாடுகளும் உதறித்தள்ளப்பட்டது. இனி என்ன விதிசெய்வாய் தமிழா!