வரவு செலவு திட்டம் 2024 : வாக்கெடுப்பில் பங்கேற்காமை குறித்து நாமல் விளக்கம்!
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமை குறித்து சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமளித்துள்ளார்.
இந்த வரவு செலவு திட்டதின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாத காரணத்தால், தாம் குறித்த முடிவை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) இடம்பெற்றிருந்த நிலையில், அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கான நிவாரணம்
வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சில நல்ல மற்றும் கெட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டுகான வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற வகையில், வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுப்பது தமது கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ச, இந்த திட்டத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |