உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : விசாரணைகள் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், ஒரு நீதிபதி இல்லாத காரணத்தினால் நான்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்சேபனைகள்
இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதி சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனுதாரரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார சார்பில் முன்னிலையான அதிபரின் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நிதியமைச்சர் சமர்ப்பித்த உரையின் பிரதியை சமர்ப்பிக்க அனுமதி கோரியுள்ளார்.
மேலும், இந்த மனுக்களின் எதிர்மனுதாரராக குறிப்பிடப்பட்டிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.என். சார்ள்ஸ் ஆட்சேபனைகளை தாக்கல் செய்துள்ளதாக அவர் சார்பில் முன்னிலையான அதிபரின் சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, முன்வைக்கப்பட்ட அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகுமென அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |