அரச ஊழியர்களின் சம்பள உயர்வு போதாது: ஜோசப் ஸ்டாலின் காட்டம்!
அரச ஊழியர்களின் கோரிக்கைகள் எதனையும் அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ,
சம்பள உயர்வாக கருத முடியாது
"2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரச துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்பதை அதிபர் ஒப்புக்கொண்டு, அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் ஏற்கனவே 7,800 ரூபாயாக இருந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை மேலும் 10,000 ரூபாயாக அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படும் எனவும் மீதி சம்பளம் பின்னர் வழங்கப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.
அதேபோல், வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்கு முன் வட் வரியானது 18% ஆக அதிகரித்தது, அதனைத் தொடர்ந்து மின் கட்டணம், அனைத்து பொருட்களுக்குமான விலைகள், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் என்பன அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பள உயர்வினை சம்பள உயர்வாக கருத முடியாது, இந்த வரவு செலவுத் திட்டம் எந்தவொரு சம்பள அதிகரிப்பு குறித்தும் அக்கறை கொள்ளவில்லை அதுமாத்திரமல்லாது அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வுகளையும் இந்த வரவு செலவுத்திட்டம் வழங்கவில்லை.
தொழிற்சங்க நடவடிக்கைகள்
இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சம்பள உயர்வை வைத்து வேறு எந்த வாழ்க்கைச் செலவுக் கூறுகளையும் நிர்வகிக்க முடியாது.
ஆனால் அரச ஊழியர்கள் யாரும் எதிர்பாராத வகையில் ஓய்வூதியம் பெறுவோர் பங்களிப்புகளுக்கான சம்பளத்திலிருந்து 8 சதவீதத்தினை அனைத்து சேவைப் பிரிவினருக்கும் அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் முதல் வழங்கவிருப்பதாக வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் கல்வி தொடர்பான புதிய திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை,
எனவே, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் வாசிப்பின் போது அரச ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் செய்யப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது." என்றார்.
இறுதியாக இந்த வரவு செலவுத் திட்டத்தினால் அரச ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.