தென்னாபிரிக்காவில் இடிந்துவிழுந்த ஐந்து மாடிக்கட்டடம்: இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள பலர்!
தென்னாபிரிக்காவில் (South Africa) ஐந்து மாடிக்கட்டடம் இடிந்துவிழுந்ததில் இருவர் பலியாகியுள்ளதுடன் சுமார் 55 பேர் கட்டட இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெஸ்டேர்ன் கேப் மாகாணத்தின் (Western Cape province) ஜோர்ஜ் நகரத்தில் (George) நேற்று (06) இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை 22 பேர் இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருவர் உயிரிழப்பு
குறித்த கட்டடம் இடிந்து விழுந்தவேளை கட்டடத்திற்குள் சுமார் 75 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீட்கப்பட்ட 22 பேரில் பின்னர் பலத்த காயங்கள் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
மீட்பு நடவடிக்கைகள்
இந்த நிலையில் இடிபாடுகளை அகற்றுவதற்கான இயந்திரங்களை பயன்படுத்துவதுடன் மோப்பநாய்களை பயன்படுத்துகின்றோம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டடம் முழுமையாக தரைமட்டமான நிலையில் காணப்படுவதையும் கட்டடத்தின் கூரை இடிபாடுகளிற்குள் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை “நபர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்தேன் பாரிய சத்தம் கேட்டது முழுகட்டடம் இடிந்துவிழுந்தது. இதனைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்“ என அங்கிருந்த ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |