யாழ். நோக்கி ஆசிரியர்களுடன் பயணித்த பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்
யாழ்ப்பாணம்(Jaffna) நோக்கி ஆசிரியர்களுடன் பயணித்த பேருந்தை இலக்குவைத்து கல்வீச்சுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறித்த தாக்குதலானது நேற்று(18.02.2025) மாலை பளைப் பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் அடாவடித்தனம்
அந்த அறிக்கையில், யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுப் பாடசாலைகளுக்குச் சென்றுவரும் ஆசிரியர்களின் பேருந்து நேற்றுமுன்தினம்(17) தனியார் சிலருடன் இணைந்து போக்குவரத்துப் காவல்துறையினரால் குறித்த வாகனம் பரந்தனில் வழிமறிக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாகன சாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளுக்குச் செல்வதற்கான போக்குவரத்துப் பிரச்சினைகளுக்காகத் தாம் இவ்வாறு வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்திச் சென்று வருவதாகத் தெரிவித்த போதும் காவல்துறையினர் அவ்வாறு செல்ல முடியாது என்று தெரிவித்து தண்டம் விதித்துள்ளனர்.
குறித்த காவல்துறையினரின் அடாவடித்தனத்தின் போது வேறு நபர்கள் சிலர் அருகில் இருந்ததாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரிலேயே ஆசிரியர்கள் பயணித்த வாகனத்துக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கல்வீச்சுத் தாக்குதல்
காவல்துறையினரின் இத்தகைய முறையற்ற செயற்பாடுகளின் பின்னணியில் சிலர் செயல்பட்டிருந்த நிலையில் நேற்று (18) மாலை முல்லைத்தீவிலிருந்து ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் திரும்பும் வழியில் பளைப் பகுதியில் வைத்துக் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றுமுன்தினம்(17) காவல்துறையினரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான நேற்றைய(18) தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே சந்தேகம் எழுகின்றது.
கைதுசெய்ய கோரிக்கை
இதுகுறித்து வடக்கு ஆளுநர் உடனடியாகப் பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டு குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களும், உடந்தையாகச் செயற்பட்டவர்களும் உடனடியாக கைதுசெய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்றுச் செயற்படும் அரசாங்கம் ஆகக் குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கேனும் ஆவன செய்ய வேண்டும்.
மேலும், காவல்துறையினர் முறையற்ற வகையில் செயற்படுவதையும், ஏனையவர்களுக்கு முறையற்ற வகையில் உடந்தையாகச் செயற்படுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
