பயணியின் காதை கடித்து விழுங்கிய நடத்துனர் : கொழும்பில் சம்பவம்
தனியார் பேருந்தொன்றின் நடத்துனர், பயணி ஒருவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்தில் நடத்துனருக்கும் பயணிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நடத்துனர் பயணியின் வலது காதின் ஒரு பகுதியை கடித்து விழுங்கியுள்ளதாக மெகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னணி
குறித்த பயணி ஞாயிற்றுக்கிழமை (17) நாவின்ன பகுதியில் இருந்து தனியார் பேருந்தி் ஏறி கொடகம வரை பேருந்திற்கான பணத்தை செலுத்திவிட்டு சாரதி இருக்கைக்கு அருகில் நின்றுள்ளார்.
அப்போது, பேருந்தின் பின்புறம் செல்லுமாறு நடத்துனர் பலமுறை பயணியிடம் கூறியதாகவும், வாக்குவாதத்தின் போது, நடத்துனர் பயணியை தாக்கி காதைக் கடித்து விழுங்கியதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மஹரகம ஆசிரியர் கலாசாலைக்கு அருகாமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், ஹோமாகம நகரை அண்மித்த போது குறித்த பயணியின் காது பகுதி காணவில்லை என குறித்த இளைஞருக்கு மற்றுமொரு பயணி தெரிவித்துள்ளார்.
அப்போது, குறித்த பயணி, மெகொட காவல் நிலையத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்தி, காதின் ஒரு பகுதி காணாமல் போயிருப்பதை அறிந்து, மெகொட காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பு, அவிசாவளையில் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனரான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மஹரகம காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |