களுவாஞ்சிக்குடி பேருந்து நடத்துநர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட விவகாரம் : பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
புதிய இணைப்பு
களுவாஞ்சிக்குடியில் (Kaluwanchikudy) தனியார் பேருந்தில் பணத்தை திருடியதாக நடத்துநர் ஒருவரை தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் உரிமையாளர் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவான் நேற்று செவ்வாய்க்கிழமை (08) பிறப்பித்துள்ளார்.
அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துநரான இளைஞன் கல்முனையைச் சோந்த தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரின் கல்முனை கதுருவெல பிரதேசத்துக்கான பிரயாணிகள் சேவை நடத்துநராக கடமையாற்றி வந்துள்ளார்.
கட்டிவைத்து சித்திரவதை
இதன்போது களுவாஞ்சிக்குடி மகிளுரைச் சேர்ந்த உரிமையாளரது பேருந்து கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் நிலையில் இரு வண்டிகளின் நேர அட்டவணையில் நிமிட கணக்கான வித்தியாசத்தினால் பிரயாணிகளை ஏற்றுவதில் அடிக்கடி முரண்பாடுகள் இடம்பெற்று வந்துள்ளது.
இந்த நிலையில் 5ம் திகதி சனிக்கிழமை கல்முனை மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்து சாரதியுடன் குறித்த தாக்குதலுக்கு உள்ளான நடத்துநர் ஒன்றாக இருந்து மதுபானம் அருந்திய நிலையில் அவருக்கு மதுபோதை அதிகரித்த நிலையில் அவரது கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது.
காணாமல் போன கையடக்க தொலைபேசி தொடர்பாக களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ள அவர், சம்பவதினமான ஏழாம் திகதி கையடக்க தொலைபேசியைத் தேடி மீண்டும் களுவாஞ்சிக்குடிக்கு சென்று குறித்த பேருந்தில் தேடிய நிலையில் அவரை பேருந்து உரிமையாளர் மற்றும் சாரதி பேருந்தில் திருடியதாக பொய்யாக தெரிவித்து பாழடைந்த காணிக்குள் இழுத்துச் சென்று தென்னைமரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.
நீதவான் உத்தரவு
இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடத்துநர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து திருட்டில் ஈடுபட்டதால் பிடித்து தாக்கியதாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது என காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை பாதிக்கப்படவரின் உறவினர்கள் மனித உரிமை ஆணையகத்தில் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து காவல்துறையினர் நடந்த உண்மையை விளங்கி கொண்டு கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
இந்நிலையில், இருவரையும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
களுவாஞ்சிக்குடியில் (Kaluwanchikudy) தனியார் பேருந்தில் பணத்தை திருடியதாக நடத்துநர் ஒருவரை தென்னைமரத்தில் கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்த பேருந்து உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (7) முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, “களுவாஞ்சிக்குடி மகிளுர் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளரது கல்முனை - மட்டக்களப்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுவரும் பேருந்தின் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டிருந்தது.
காவல்துறையினருக்கு தெரிவிப்பு
அந்த தனியார் பேருந்தில் ஏற்கனவே கடமையாற்றிய அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது நடத்துநரான இளைஞனே குறித்த பணத்தினை திருடியுள்ளதாக சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று களுவாஞ்சிக்குடியிலுள்ள சாரதி ஒருவரின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு சென்ற தனியார் பேருந்தின் உரிமையாளர் இளைஞனைப் பிடித்துக்கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பின்னர் ஒந்தாச்சிமடம் பிரதான வீதியிலுள்ள பாழடைந்த காணியில் தென்னை மரம் ஒன்றில் கட்டிவைத்து கட்டையால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு யாரும் இல்லாததையடுத்து திரும்பிச் சென்று இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என தெரிவித்தனர்.
இதேவேளை தாக்குதல் இடம்பெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எடுத்த காணொளிக் காட்சி ஊடகங்களில் வெளியானதையடுத்து காவல்துறையினர் தாக்குதல் நடாத்திய பேருந்து உரிமையாளரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைது செய்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தாக்குதலுடன் சம்பந்தப்பட சாரதி தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கோண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |