முடக்கப்படவுள்ள மன்னார் மாவட்டம்! அணிதிரளுமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
புதிய இணைப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் பொது முடக்கல் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டம் இன்று நடைபெறும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி, வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து போராட்டத்திற்கு வலு சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும், மக்கள் மீது காவல்துறை மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் நாளை திங்கட்கிழமை (29) மன்னாரில் பொது முடக்கல் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, குறித்த போராட்டத்திற்கு நாளை அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (28) 57 ஆவது நாளாக போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கான வலு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் மாவட்டம் முழுவதும் நாளை திங்கட்கிழமை பொது முடக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.அனைத்து செயல்பாடுகளும் முழுமையாக நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எமது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது போக்குவரத்துகள் அனைத்தையும் நிறுத்தி,வர்த்தக நிலையங்களை மூடி மாவட்டத்தை ஸ்தம்பிதம் அடையச் செய்து எமது போராட்டத்திற்கு வலு சேர்க்க வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அரச அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை யாற்றுகின்றவர்கள் நாளைய தினம் கடமைகளுக்கு செல்லாது எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கோரிக்கை அடங்கிய மகஜர்
திங்கட்கிழமை (29) காலை 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகும்.குறித்த பேரணி மன்னார் பஜார் பகுதியை வந்தடையும்.பின்னர் அங்கு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்படும்.
குறித்த போராட்டம் மதியம் 1.30 மணி வரை முன்னெடுக்கப்படும்.போராட்டத்தின் இறுதியில் எமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஜனாதிபதிக்கு கையளிக்கும்வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிக்கப்படும்.
எனவே மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் எமது உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,வர்த்தகர்கள்,பொது போக்குவரத்து சேவையை முன்னெடுப்போர்,உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
