ரணில் - சஜித் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியுடனான (UNP) ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கூட்டணியை எதிர்த்து போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.தே.க தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பெப்ரவரி 08ஆம் திகதி காலை கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக அந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் வெளியிட்ட தகவல்
இந்தப் போராட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe), பிரசாத் சிறிவர்தன (Prasad Siriwardana) மற்றும் சரித் அபேசிங்க (Charith Abeysinghe) ஆகியோர் ஏற்பாடு செய்து வருகின்றதாக கட்சியின் அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara), ”ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கின்றனர் என்ற செய்திகள் பொய்யானவை.
இந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
இரு கட்சிகளிலும் உள்ள மிகச் சிறிய குழுவினர் மட்டுமே தங்கள் குறுகிய நலன்களுக்காக இரு கட்சிகளும் இணைவதை விரும்பவில்லை. அந்தக் குழுவின் எதிர்ப்பையும் மீறி, நாட்டின் நலனுக்காக இரு கட்சிகளும் இணைவார்கள்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |