கனடாவில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி: சொந்தங்களால் கைவிடப்பட்டுள்ள சடலங்கள்!
கனடாவின்(Canada) சில பிராந்தியங்களில் கடந்த சில ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்கள் சொந்தங்களால் கைப்பற்றப்படாமல் அரசாங்கமே பாதுகாக்கும் நிலைக்கு காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இறுதிச்சடங்குகளுக்கான செலவு அதிகரித்துள்ளதன் காரணமாகவே, உறவினர்களின் உடல்களை கைப்பற்ற சொந்தங்கள் மறுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998ல் 6,000 கனேடிய டொலராக இருந்த இறுதிச்சடங்கு செலவு தற்போது 8,800 கனேடிய டொலரை எட்டியுள்ளது. கனடாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான ஒன்ராறியோவில்(Ontario) கைப்பற்றப்படாத உடல்களின் எண்ணிக்கை 2013ல் இது 242 என இருந்துள்ள நிலையில் 2023ல் 1183 என அதிகரித்துள்ளது.
இறுதிச்சடங்குகள்
இந்த நிலை அதிகரித்துவருவதால், குறைந்தது ஒரு பிராந்தியமாவது, புதிதாக பிணவறை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உறவினர்களால் தங்கள் சொந்தங்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டாலும், பல்வேறு காரணங்களால் கைப்பற்றப்பட்டாமலே உள்ளதுடன் இதற்கு பணம் தான் 24 சதவிகித காரணமாக உள்ளது.
இதனால், ஒன்ராறியோ நிர்வாகம் தற்போது புதிய திட்டமொன்றை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. அதாவது, 24 மணி நேரத்தில் ஒரு சடலம் கைப்பற்றப்படாமல் போனால், உற்றார் உறவினர்களை கண்டுபிடித்து, அவர்களின் நிலை அறிந்துகொண்டு, உள்ளூர் நகரசபை நிர்வாகம் எளிய முறையில் இறுதிச்சடங்குகளை முன்னெடுக்கும்.
மிட் டவுன் ரொறன்ரோவில்கல்லறையை திறப்பது மற்றும் மூடுவது, இறுதிச்சடங்குகள், வரி மற்றும் பிறப்பொருட்களுக்கான செலவுகள் இல்லாமல் கல்லறை ஒன்றிற்கு செலவு 34,000 டொலர் வரையில் செலவாகின்றது.
இறுதிச்சடங்குகளுக்கு மட்டும் தற்போது 2,000 முதல் 12,000 டொலர் வரையில் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனாலேயே, சமீப ஆண்டுகளில் வசதி வாய்ப்புகள் இல்லாத மக்கள் தங்கள் உறவினர்களின் உடல்களை கைப்பற்றி இறுதிச்சடங்குகளை நடத்த முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |