கனடாவில் குடியேற விரும்புபவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
ஆண்டொன்றுக்கு நான்கு இலட்சம் பேரை குடியேற்றுவதற்கு கனடா புதிய திட்டத்தை வகுத்துள்ளது.
கனடா மற்ற நாடுகளில் கிடைக்காத அளவுக்கு எல்லா துறைகளிலும் வேலை வாய்ப்பை, வளர்ச்சியை வழங்குகிறது. அதற்கு ஏற்றாற் போல, ஒவ்வொரு ஆண்டும் குடியேற்ற நிலைகளை மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டும் புதிய குடியேற்ற திட்டத்தை கனடா அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வொரு குறிப்பிட்ட கால கட்டத்திலும், குடியேற்ற இலக்குகளை கனடா அரசாங்கம் அதிகரிக்கும். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சூழலிலும் குடியேற்றம் வழங்குவதில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆரம்பத்தில், 4.11 இலட்சம் பேருக்கு குடியுரிமை அளிக்க முடிவெடுத்து அறிவித்தது கனடா அரசு. ஆனால், கனடா அரசாங்கம் தனது 2022 – 2024 க்கான புதிய குடியேற்ற நிலைகள் பற்றிய அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
அதில், 4.32 இலட்சம் புதிய குடியேற்ற திட்டங்கள் மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டு வரை, கனடா ஆண்டுக்கு 2.5 இலட்சம் புலம்பெயர்ந்தவர்களை வரவேற்றது. 2016 ஆம் ஆண்டில், குடியேறுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக மாறியது. கொவிட் தொற்று பரவி ஊரடங்கு அறிவிக்கும் முன்னர், ஆண்டுக்கு 3.4 இலட்சம் நபர்களுக்கு குடியேற்றம் வழங்க இலக்கு மேற்கொண்டது.
ஆனால், ஊரடங்குக் கட்டுப்பாடு காரணமாக, 2020 ஆம் ஆண்டில் புதிய குடியேற்றம் 2 இலட்சத்துக்கும் கீழே குறைந்தது. இடையில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, திறமையான பணியாளர்களின் தட்டுப்பாடு மற்றும் அதிகரிக்கும் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதிக எண்ணிக்கையில் குடியேற்றம் வழங்க திட்டங்கள் உருவாகின.
2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் என்ட்ரி, ப்ரோவின்ஷியல் நொமினி திட்டம் மற்றும் டெம்பரரி – பேமனென்ட் ரெசிடன்ஸ் உள்ளிட்ட பொருளாதார திட்டங்களின் வழியே, 56% குடியேற்றம் நிகழ்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றம் கூடும் போது, குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டம் (IRPA) விதிமுறைகளின் அடிப்படையில், கனேடிய அரசாங்கம் தனது குடியேற்றத் திட்டத்தை நவம்பர் 1 ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், குடியேற்ற திட்டத்தில் பின்வரும் எண்ணிகையை இலக்காகக் கொண்டுள்ளது. 2022: 431,645 நிரந்தர குடியிருப்பாளர்கள் 2023: 447,055 நிரந்தர குடியிருப்பாளர்கள் 2024: 451,000 நிரந்தர குடியிருப்பாளர்கள்
CIC செய்திகளுக்கு பேட்டியளித்த குடியேற்றதுறை அமைச்சர் ஷோன் ஃபிரேசர் இந்த திட்டத்தைப் பற்றி விளக்கினார்.
“ இந்த நிலைகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் ஏற்படும் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. கனடா நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்கும் வகையில், மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் திறமைவாய்ந்த பணியாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்தத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு உதவி செய்கிறது. அதிக அளவு, பொருளாதார ரீதியாக, தொழிலாளர் மற்றும் மக்கள் தொகை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளும் சவால்களும் அதிகமாக உள்ள இடங்களில் புதிய நபர்களை அதிக எண்ணிக்கையில் தக்க வைப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார மேம்பாட்டின் மீது கவனம் செலுத்துகிறோம். இது வரை, நாங்கள் சாதித்ததைப் பற்றி பெருமை அடைகிறோம். புதியவர்களின் விருப்பமாக கனடா இருக்கும் என்றும் விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.
