கனேடிய ஈழத் தமிழர்களை உரசும் றோ நகர்வு
கனடாவில் செயற்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக கனடா குற்றம் சாட்டியதை அடுத்து கனடாவுடனான இந்தியாவின் இராஜதந்திர உறவுகள் மோசமடைந்துள்ளன.
இந்த இந்தோ - கனேடிய கொதிநிலை ஒரு கட்டத்தில் கனடாவில் வாழும் பூர்வீக ஈழத் தமிழர்களின் விடயத்தையும் உரசும் வகையில் மாறுமோ என்ற கவலைகளும் எழத்தான் செய்கின்றன.
கனடா மீதான வெறுப்பு
குறிப்பாக கனடா மீதான வெறுப்பைக் கொண்டுள்ள சிறிலங்காவின் சிங்கள கடும்போக்காளர்கள் இந்த விடயத்தில் தந்திரோபாயமாக இந்தியாவுடன் நெருங்கி நிலைமையை கனேடிய ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடும் என்ற நிலை இருக்கிறது.
கனடாவில் உள்ள முக்கிய சீக்கிய அமைப்புகள் ஈழத் தமிழ் அமைப்புகளுக்கு தோழமை காட்டிச் செயற்பட்டு வருவது தெரிந்த விடயம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கனேடிய சீக்கிய செயற்பாட்டாளர்கள் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை
கனடா இதுவரை உலகில் இடம்பெற்ற 8 இனப்படுகொலைகளை அதிகாரபூர்வமாக அங்கீகரித்த நிலையில், ஒன்பதாவதாக இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலையையும் அது அங்கீகரித்து விடும் என்ற அச்சம் சிங்கள கடும்போக்காளர்களிடம் இருப்பதால் அவர்களுக்கு கனடா மீதான வெறுப்பும் சீற்றமும் இருக்கத்தான் செய்கின்றன.
அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது உருவாகியுள்ள இந்தோ - கனேடிய கொதிநிலை இருப்பதாக கருதப்படக்கூடும்.
இந்த வருடம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பின்னணியில், கனேடியப் பிரதமரிடம் இருந்து வெளிப்பட்ட அறிக்கையில் தமிழர் இனப்படுகொலை நினைவு நாள் என்ற பதம் பயன்படுத்தப்பட்டமை சிறிலங்கா அரசாங்கத்தையும் சிங்கள கடும் போக்காளர்களையும் சீற்றப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கனடாவுடன் சிறிலங்காவுக்கு ஏற்கனவே உள்ள இராஜந்திர கொதிநிலை எதிர்காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு முக்கிய அரசியல் முதலீடாக மாறக்கூடும் என்ற கருத்தில் வலுவாக இருக்கும் நிலையில், இந்த வலுவை கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் வீழ்ச்சி கடுமையாக உரசக்கூடும் என்ற ஐயங்கள் இருக்கின்றன.