கனேடிய வரலாற்றில் முதன்முறையாக சபாநாயகராக தெரிவான கறுப்பினத்தவர்!
கனடா நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கிரெக் பெர்கஸ் என்ற கனேடிய கறுப்பினத்தவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாயன்று (03) கூடிய நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக புதிய சபாநாயகராக அறிவிக்கப்பட்டார்.
கனேடிய வரலாற்றில் முதன் முறையாக சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கறுப்பினத்தவர் என்ற பெருமையினை கிரெக் பெர்கஸ் தனதாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இரகசிய வாக்கெடுப்பு
முன்னாள் சபாநாயகர் அண்டனி ரோட்டா கடந்த வாரம் தனது பதவியினை இராஜினாமா செய்திருந்ததால், புதிய சபாநாயகருக்காக மீண்டும் தேர்தல் நடாத்தப்பட்டது, இந்த தேர்தலில் கியூபெக் லிபரல் சட்டமியற்றுபவரான, 54 வயதான கிரெக் பெர்கஸ், என்பவர் புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.
சட்டமியற்றுபவர்கள் இவரை இரகசிய வாக்கெடுப்பு மூலமாக சபாநாயகராக தேர்ந்தெடுத்தாதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெர்கஸ் பதவியேற்றவுடன் "அனைவரையும் நான் மரியாதையுடன் வழிநடத்துவேன் என உறுதியளித்த அவர், ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும் எனவும் சக சட்டமியற்றுபவர்களை ஊக்குவித்தார்" என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி இராணுவப் பிரிவுக்காகப் போராடிய ஒருவரை அழைத்து கௌரவித்ததை காரணம் காட்டியே முன்னாள் சபாநாயகர் பதவி விலகியதாகவும், பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கூறியதாகவும் கூறப்படுகிறது.