யாழில் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய கனேடிய உயர்ஸ்தானிகர்
புதிய இணைப்பு
(09.06.2024)
இலங்கை மக்களின் நலன் மீது கனேடிய புலம்பெயர் தமிழர்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் உரிமையாளர் வைத்தியர் செந்தில்குமரன் (Senthil Kumaran) தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு டயாலிசிஸ் இயந்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், " 2008ஆம் ஆண்டு தொடக்கம் கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தை ஆரம்பித்ததிலிருந்து கனேடிய தமிழ் மக்கள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
மேலும், இலங்கை மக்களின் நலன் மீது கனேடிய புலம்பெயர் தமிழர்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
அது மாத்திரமன்றி, சுமார் 118 மக்களின் உயிர் காப்பிற்கு அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த உதவியை செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
(07.06.2024)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக, இதய அதிர்வு கண்காணிப்பு இயந்திரம் ஒன்று இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது இன்றையதினம் (7) போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த இயந்திரம் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதய அதிர்வு இயந்திரம்
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கனேடிய உயர்ஸ்தானிகர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டதுடன், வைத்தியசாலை வளாகத்தினுள் நினைவுச் சின்னமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் "எரிக் வாஸ்" (Eric Walsh) கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.
மேற்படி இதய அதிர்வு இயந்திர உதவியுடன் நோயாளர்களுக்கு இதய சத்திர சிகிச்சையினை வழங்க முடியும்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை
இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பயன்பாட்டிற்கான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது இன்று (07) காலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது, கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இரத்த சுத்திகரிப்பு சேவை
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் திரு எஸ்.குமரவேல் மற்றும் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் த.காண்டீபன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி உதவித்திட்ட கையளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.
மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் , செந்தில்குமரன் நிவாரண நிறுவன ஸ்தாபகர் திரு.டி.செந்தில்குமரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் போதனா மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆ.தங்கராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேற்படி இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடன் நாளாந்தம் 4நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சேவையை வழங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |