காற்று மாசினால் முடக்கப்படும் இந்தியாவின் தலைநகரம்
டெல்லியில் வீதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாடுகள் சம்பந்தப்பட்ட பொருட்களை கொட்டினால் அபராதம் விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கடந்த 10 நாட்களாக டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் புகை நச்சுமண்டலத்தால் அவதியுற்று வருகின்றனர்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் சமீபத்தில் தீபாவளி பண்டிகையால் பொதுமக்கள் வெடித்த பட்டாசும் தான் இதற்கு காரணம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300 கிலோ மீற்றர் தொலைவுக்குள் அமைந்துள்ள அனல்மின் நிலையங்களில் ஐந்தை தவிர மற்றவைகளை நவம்பர் 30 வரை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி மாநில அரசு முதற்கட்டமாக பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவித்துள்ளது.
அதேபோல் அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளது.
15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தப்படும் பெற்றோல், டீசல் வாகனங்களை இயக்கவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது