பேருந்தை தொடர்ந்து இடம்பெற்ற மற்றுமொரு விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடந்தது என்ன..!
நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை அரச பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்த நிலையில் ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் இன்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்தில் சிக்கியவர்களாவர்.
பேருந்துக்கு வழிவிட முயன்றபோது நிகழ்ந்த அனர்த்தம்
காரை மகள் செலுத்திச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. எதிர்திசையில் பயணித்த பேருந்துக்கு வழிவிட முயன்றபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த மூன்று பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் தெய்வாதீனமாக இரண்டு பிள்ளைகளுக்கும் எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
