பற்றியெரிந்த கப்பலை வைத்து அரசியல் செய்கிறார் கர்தினால் - தேரர் கடும் சாடல்
கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பிடித்து எரிந்த வெளிநாட்டுக் கப்பல் விவகாரத்தை வைத்து கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அரசியல் செய்வதாக தென்னிலங்கையின் முன்னணி பௌத்த பிக்கு ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கர்தினாலின் கருத்துக்கள் காரணமாக தென்னிலங்கையில் குழப்பகரமான சூழல் ஏற்படலாம் என சிங்கள ராவய அமைப்பின் தலைவரான மாகல்கந்தே சுதத்த தேரர் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அவசர ஊடக சந்திப்பை நடத்திய கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக, நட்டஈடு கோரி மீனவ சங்கங்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்திருந்தார். நாட்டைப் பாதுகாப்பதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று ஸ்ரீலங்காவை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
கர்தினாலின் இந்தக் கருத்துக்களினால் அரச மட்டத்தில் மிகப்பெரிய அதிர்வலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பௌத்த கடும்போக்குவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பின் தலைவர் மாகல்கந்தே சுதத்த தேரர், கர்தினாலின் கருத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீ விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட கடல்வளப் பாதிப்பின் காரணமாக நீர்கொழும்பு வாழ் மீனவர்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அவர்களை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு மதத்தலைவர்கள் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது. அதற்கு மாறாக மீனவர்களுக்கு நிவாரணத்தை வழங்க பேச்சுநடத்த வேண்டும்.
கொவிட் மற்றும் பல பிரச்சினைகளில் நாடு நெருக்கடியிலுள்ள நிலையில், மக்களை வேறு விதமாக திசைதிருப்ப மதத்தலைவர்கள் நடவடிக்கை எடுக்கக்கூடாது.கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையின் நேற்றைய கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயம்தான்.
ஆனால் அவர் முன்வைத்த தொனியே பிரச்சினைக்குரியதாகும். அவரது அறிவிப்பு காரணமாக தென்னிலைங்கை மீனவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டு வீதிகளில் இறங்கி அவர்கள் போராட்டங்களை நடத்தினால் கொவிட் தொற்று ஒழிப்பிற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகள் தோல்வியடைந்துவிடும்.
இந்த பிரச்சினையை பயன்படுத்தி கர்தினால் அரசியல் செய்யக்கூடாது என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் ஸ்ரீலங்கா பிரதிநிதியை அரசாங்கம் ஏன் இதுவரை கைது செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
குறித்த கப்பலின் மாலுமி உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருந்த அதேவேளை, அந்தக் கப்பலில் ஆரம்பத்தில் தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஏன் சர்வதேச கடல் எல்லைக்குச் செல்ல ஸ்ரீலங்கா அரசாங்கம் உத்தரவிடவில்லை எனவும் மாகல்கந்தே சுதத்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

