குற்றவாளிகளுக்கு மன்னிப்பா? பேராயர் மல்கம் ரஞ்சித்திற்குப் பகிரங்கக் கடிதம்
-- தனிப்பட்ட குடும்ப அரசியல், உள்ளூர் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளியாமல், உலக மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் பணிகளிலேயே திருத்தந்தையும் (Pope) அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கர்தினால்களும் ஈடுபட்டு வருகின்றனர் -
ஆனால் தாங்கள் இலங்கைத்தீவில் வாழும் ஏனைய சமூகங்களை ஏன் ஓரக் கண்ணால் பார்க்கிறீர்கள்?
வத்திகானில் உள்ள திருத்தந்தையின் 'கார்தினால்' என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்.--
திருதந்தையின் உண்மைப் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கலாமே?
1991 ஆம் ஆண்டு யூன் மாதம் பதினேழாம் திகதி தாங்கள் கொழும்பு துணைப் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டுப் பின்னர் 1995 இல் இரத்தனபுரி மறை மாவட்ட ஆயராகவும் 1995 முதல் 2001 வரை இரத்தினபுரி ஆயராகவும் பணிபுரிந்தீர்கள்.
அதன் பின்னர் 2001 ஒக்ரோபர் முதலாம் திகதி உரோமை மறைபரப்பு பேராயத்தின் துணைச் செயலராகவும் நியமனம் பெற்றிருந்தீர்கள். வத்திக்கானில் உள்ள உலகக் கத்தோலிக்கத் திருத்தந்தையின் (Pope) இந்தோனேசிய மற்றும் கிழக்குத்தீமோர் நாடுகளுக்கான தூதுவராக 2004 ஏப்ரல் முதல் 2005 டிசம்பர் வரை பணியாற்றியபோதுதான் தாங்கள் பேராயராகவும் தரமுயர்த்தப்பட்டீர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.
இப் பின்புலத்திலேதான் 2009ஆம் ஆண்டு யூன் மாதம் 16ஆம் திகதி திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ற் தங்களை கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார்.
அதே ஆண்டு யூன் 29ஆம் திகதி புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்றின் கரங்களினால் பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய 'கம்பளித் தோள்பட்டை' ((Pallium) தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பின்னர் கொழும்பு உயர் மறைமாவட்டப் பொறுப்பை அதே ஆண்டு ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி ஏற்றீர்கள். உங்கள் சேவை மற்றும் இனமத பேதமற்ற 'மனிதகுலம்'; என்ற பொது மனப்பாங்கு ஆகியவற்றைக் கணிப்பீடு செய்தே 2010 ஆண்டு ஏப்ரல் மாதம் தங்களுக்குக் 'கர்தினால் என்ற சர்வதேச தரம்வாய்ந்த அந்தஸ்த்துக் கிடைத்தது.
அதாவது எதிர்காலத்தில் திருத்தந்தையாகவதற்குரிய அங்கீகாரம் என்றால் அது மிகப் பொருத்தம். உலகக் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் திருத்தந்தை (Pope) வத்திக்கானில் இருக்கிறார்.
வத்திக்கான் என்பது இத்தாலி நாட்டின் ஒரு நகரமாக இருந்தாலும் வாத்திக்கான் திருத்தந்தையின் இறை அரசசாட்யின் கீழ் தனித்தே இயங்குகின்றது.
ஆகவே இனமத பேதங்களைக் கடந்து உலக மக்கள் நலனுக்காக மாத்திரம் குறிப்பாக புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார நிலைமைகளைக் கற்றுணர்ந்து அவதானித்து உலக வல்லரசுகளின் தவறுகளைச் சமநிலையில் சுட்டிக்காட்டிச் சீர்திருத்தக்கூடிய உயர்தரமிக்க 'திருத்தந்தை' (Pope) ஆவதற்குரிய அங்கிகாரத்துக்கான 'கர்தினால் என்ற அந்தஸ்தில் தாங்கள் இருப்பது இலங்கைத்தீவு மக்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ஆயராக இருந்து கர்தினால் வரையும் தாங்கள் தரமுயர்ந்தமைக்கு வத்திகானில் உள்ள திருதந்தையின் அவதானிப்புத்தான் காரணம் என்பதைத் தாங்கள் அறியாதவருமல்ல.
தரமுயர்வதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் அல்லது வேறு உயர்நிலையில் உள்ளவர்களின் செல்வாக்குகள் அவசியமற்றவை.
ஆகவே நன்னடத்தைகள் கல்வித் தகுதிகள் கணிக்கப்பட்டுத் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்தரப் பதவிகளை வைத்துக் கொண்டு திருதந்தையின் உண்மைப் பிரதிநிதியாகச் செயற்பட்டிருக்கலாமே?
இலங்கை ஒற்றையாட்சி அரசு
தனிப்பட்ட குடும்ப அரசியல், உள்ளூர் கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கு இடமளியாமல், உலக மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் வாழ்வியல் உரிமைகளை உறுதிப்படுத்தும் பணிகளிலேயே திருத்தந்தையும் அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் கர்தினால்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
தாங்கள் ஆயராகப் பதவியேற்ற 1991 ஆம் ஆண்டுதான் ஈழப் போர் இரண்டாம் கட்ட நிலையில் உக்கிரமடைந்தது. அப்போது யாழ் ஆயராக இருந்த மறைந்த தியோகுப்பிள்ளை இலங்கைத்தீவு மக்கள் என்ற உணர்வுடனும் வடக்குக் கிழக்கு ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை, ஈழத்தமிழ் மரபு பண்பாடு என்பதிலும் உறுதியர்க இருந்தார்.
அப்போது கொழும்பு உயர்மறை மாவட்ட பேராயராக இருந்த மாக்கஸ் பெர்னாண்டோ ஈழத்தமிழர்கள் சார்ந்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.
மாறாக இலங்கை 'ஒற்றையாட்சி அரசு' என்ற கட்டமைப்பைப் பாதுகாக்கும் பேராயராகவே அவரும் செயற்பட்டிருந்தார்.
இத்தனைக்கும் அவர் சிலாபத்தைச் சேர்ந்த ஒரு தூயதமிழர். மாக்கஸ் பெர்ணான்டோ 'இலங்கைத்தேசியம்' என்ற வரையறைக்குள் செயற்பட்ட காரணத்தினால் கத்தோலிக்கச் சமயப் பணிகள் பற்றிய விவகாரங்களில்கூட யாழ் ஆயர் தியோகுப்பிள்ளை கொழும்பு உயர் மறை மாவட்டத் திட்டங்களுக்கு கட்டுப்படாமல் வடக்குக் கிழக்கு ஆயர்கள் என்ற சிந்தனையை வரையறுத்துச் செயற்பட வேண்டிய சூழல் உருவாகியிருந்தது.
அரசியல் நீதி
1992 இல் மன்னார் மறை மாவட்டத்துக்கு ஆயராகத் தெரிவு செய்யப்பட்ட இராஜப்பு ஜோசப், ஆயர் தியோகுப்பிள்ளை செய்த பணியின் தொடர்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருந்தார்.
ஆனால் இனவாதமற்ற மற்றும் ஒட்டுமொத்த இலங்கைத்தீவு என்ற உயர் நிலையிலும் ஈழத்தமிழர்களின் தனித்துவமான அரசியல் விடுதலையைச் சாத்தியப்படுத்தும் வியூகங்களோடும் செயற்பட்டிருந்தார் என்பது தங்களுக்குத் தெரியாததல்ல.
2009 இறுதி யுத்தத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருப்பதாக ஆயர் இராஜப்பு ஜோசப் ஜெனிவாவில் கூறியிருந்தார்.
எண்பது வருட அரசியல் விடுதலைப் போராட்டத்தில் அரசியல் நீதி கிடைக்கவில்லை என்றும் ஆயர் விரிவாகக் கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
ஆனால் தாங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்தும், சிங்களத் தலைவர்கள் 2009 இற்குப் பின்னர் கடந்த பதினான்கு ஆண்டுகளாக நிரந்தர அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை என்பது பற்றியும் இதுவரை எதுவுமே பேசவில்லையே!
இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணத்தை அடுத்து சர்வதேச விசாரணையைக் கோரியுள்ளீர்கள்.
ஆனால், 2009 போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆயர் இராயப்பு ஜோசப் கோரியபோது ஏன் மௌனமாக இருந்தீர்கள்?
ஜெனிவாவில் சர்வதேச விசாரணை அவசியம் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டபோதும் ஏன் வாய்திறக்கவில்லை?
வடக்கு கிழக்கில் வாழும் கத்தோலிக்கராகிய தமிழர்களின் சமயப் பணிகளில் கூட ஒழுங்கான முறையில் தாங்கள் கவனம் செலுத்தி வருகிறீர்களா என்பது கேள்வியே.
முப்பது வருடகாலப் போரில் இலங்கை இராணுவத்தால் குறைந்தது ஒன்பது அருட் தந்தையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் கைதாகி விசாரிக்கப்பட்டனர். 1982ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் அருட்தந்தை .சிங்கராயர் கைது செய்யப்பட்டதில் இருந்து தமிழ் கத்தோலிக்க தேவாலயங்கள் பல அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றன.
இது பற்றித் தாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் ஒரு தடவையேனும் பகிரங்கமாக நீதி கேட்டதாகத் தெரியவில்லை.
இப் பின்புலத்தில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சூத்தரதாரிகள் மனம் திருந்திக் குற்றத்தை ஏற்றுக்கொண்டால் மன்னிப்பு வழங்கப்படும் என்று எந்த அடிப்படையில் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டீர்கள்?
பாவமன்னிப்பு
மனந்திரும்புதலாகிய செயலின் மூலமாக ஒருவர் பாவமன்னிப்பைப் பெற முடியும் என்று அர்த்தமல்ல.
இதனை விளக்கும் வாசகங்கள் பைபிளில் உண்டு. (கொரிந்தியர் பத்தாம் பதினொரம் அதிகாரங்கள்) இது பற்றி எந்த வாக்குவாதத்திற்கும் இடமில்லை. ஒன்றின் காரணமாக மற்றொரு காரியம் நிகழ்வதற்கும் (Cause – மூலம்) ஒன்றில்லாமல் இன்னொன்றிருக்க முடியாது என்று சொல்லுவதற்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு.
பைபிளின் படி ஒருவன் நீதிமானாகிறபோது மாத்திரமே அவனுடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்து அவன் குற்றவாளி இல்லை என்ற நிலையை அடைய முடியும்.
அந்த நீதிமானாகுதலை ஒருவன் விசுவாசத்தின் மூலம் மட்டுமே அடைய முடியும் (Faith Alone). ஆகவே நீதிமான் என்ற தகுதியைப் பாவம் செய்தவனுக்கு வழங்குகின்ற கிருபையின் கருவியாக (Instrumental Means) இருப்பதே விசுவாசம்.
ஆகவே குற்றவாளிகளுக்கு விசுவாசம் எங்கிருந்து யாரை நோக்கி வரும்? உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றம் மாத்திரமா? இல்லையே! போர்க்காலத்தில் நடந்த குற்றங்கள், ஊழல்மோசடி, அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு அல்லவா?
இலங்கைத்தீவு மக்கள்
இவை பற்றியெல்லாம் சுட்டிக்காட்டிப் பேச மறுக்கும் தாங்கள் முதலில் வடக்குக் கிழக்கு உள்ளிட்ட ஒட்டுமொத்த 'இலங்கைத்தீவு மக்கள்' என்ற விசுவாசத்தின் மூலம் நீதிமானாக மாற்றமடைய முற்படுங்கள்.
அதன் பின்னர் மற்றைய குற்றவாளிகளுக்கு மன்னிப்புக் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்.
சிங்களக் கத்தோலிக்க மக்கள், பௌத்த சிங்களவர்கள் என்ற உணர்வை மாத்திரம் முன்னிலைப்படுத்தி நீதிமானாகிவிட முடியாது இதனைப் புரிய மறுக்கத் தாங்கள் சிறுபிள்ளை அல்ல.
வத்திகானில் உள்ள திருத்தந்தையின் 'கார்தினால்' என்ற சர்வதேச அந்தஸ்தில் (International Excellence) இருந்து கொண்டு, இலங்கைத்தீவில் உள்ள ஏனைய சமூகங்களை ஓரக் கண்ணால் பார்க்கும் சிறுமைத் தனத்தில் (Smallness) இருந்து முதலில் தாங்கள் வெளியே வர வேண்டும்.
தமிழர்களுக்காகச் செய்த உதவி
தங்கள் தமிழர்களுக்காகச் செய்த உதவி ஒன்றேயொன்றுதான் 1995 இல் சந்திரிகாவின் அரசாங்கம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது சுமார் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பெருநிலப்பரப்பில் உறவினர்களின் வீடுகளிலும் கொட்டகைகளிலும் வாழ்ந்தார்கள்.
அவர்களுக்கு உதவி செய்வதற்காக யாழ் மரியன்னை பேராலய பங்குத் தந்தை ஜெபநேசன் அடிகளார் கொழும்புக்கு வந்து உதவிப் பொருட்களையும் ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் பெற்றுக் கொண்டு வன்னிக்குச் சென்றிருந்தபோது வவுனியா சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அப்போது இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அந்தப் பொருட்களும் பணமும் விடுதலைப் புலிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதல்ல, இடம்பெயர்ந்து வாழும் மக்களின் தேவைகளுக்காக என்று அடித்துக் கூறியிருந்தீர்கள்.
இதுதான் அன்று தாங்கள் நினைத்துச் செய்த ஒரு நல்ல காரியம். ஆனாலும் பல மாதங்கள் சிறையில் இருந்த பின்னரே அருட்தந்தை விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
சிறையில் நடத்தப்பட்ட பலமான அடி உதையினால் நோய் ஏற்பட்டே ஜெபநேசன் மரணமடைந்தாக மருத்துவர்கள் அன்று கூறியிருந்தனர் என்பதையும் ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
ஆயர் தியோகுப்பிள்ளை ஒய்வு பெற்றபோது வெள்ளி மற்றும் பொன் வைர விழாக்கள் ஒருமித்து 1992 டிசம்பரில் யாழ்ப்பாணத்தில் நடந்தபோதுதான், கொழும்புப் பேராயராக இருந்த மார்க்கஸ் பெர்ணான்டோ நீண்டகாலத்திற்குப் பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததுடன், முதன் முதலாக ஆயர் தியோகுப்பிள்ளையுடன் மனம் திறந்து பேசியுமிருந்தார்.
தமிழர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகள், இராணுவக் கெடுபிடிகள் பற்றியும் அதற்கு எதிராக ஆயர் தியோகுப்பிள்ளை மேற்கொண்டு வரும் சேவைகள் பற்றியும் பாராட்டியிருந்தார்.
அதேபோன்று தமிழ் ஆயர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் விசுவாசத்தை வெளிப்படுத்தித் தாங்கள் மனம் திறந்து பேச வேண்டும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கொல்லப்பட்ட 269 பேரில் அதிகமானோர் தமிழர்கள்.
ஆகவே ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அரசியல் அநீதிகளுக்குச் சர்வதேச நீதி அவசியம் என்ற முதன்மைக் காரணத்தைத் துணிவுடன் தங்களால் முன்மொழிய முடியுமா?
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Beulah அவரால் எழுதப்பட்டு, 19 September, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
