இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கூற தயங்கும் கர்தினால் : சிறீதரன் பகிரங்கம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் கர்தினாலும், கத்தோலிக்க சபையினரும், இலங்கையில் தமிழ் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கேள்வியெழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11) நடைபெற்ற அமர்வின்போது ''வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்'' தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் இந்த நாட்டில் நடந்த இனவழிப்பு தொடர்பில் கடந்த மே 18ஆம் திகதி கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஜீவந்த பீரிஸின் கருத்து
இந்த நாட்டில் இனவழிப்பு நடந்தது. தொடர்ந்தும் அது நடக்கின்றது. இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக கூறிய கருத்துக்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகளும் கண்டனத்தை தெரிவித்திருந்தன.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக இன்று வரையில் குரல் கொடுக்கும் கர்தினாலும், அவரின் சபையை சார்ந்தவர்களும் இந்த நாட்டில் மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டுவது ஏனென தெரியவில்லை.
மன்னார் மாவட்ட ஆயராக இருந்த இராஜப்பு ஜோசப் வெளிப்படையாக இனவழிப்பு என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கான நீதியை கோருவதற்கு கத்தோலிக்க சபை தயாராக இல்லை. அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் முன்வைத்த கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |