மரண தண்டனையை ஏற்க முடியாது! ஆனால்...கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள தகவல்
கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி நூலின் 2267 ஆம் பத்தியின்படி மரண தண்டனை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கடமையில் இருந்து தவறியதற்காக முன்னாள் காவல்துறை மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைகள் குறித்த தனது நிலைப்பாட்டை விளக்கும்போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனை மனித மாண்பை மீறுவதாகவும், மரண தண்டனை விதிப்பதை திருபீடத்தின் போதனைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறையின் சுதந்திரம்
எவ்வாறாயினும், இலங்கை நீதித்துறையின் சுதந்திரத்தில் தங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், அதன் முடிவுகளிலோ அல்லது ஆலோசனைகளிலோ எந்த வகையிலும் தலையிட எண்ணம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்தத் தாக்குதல்களின் சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகளையும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் வெளிக்கொணர்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நாட்டின் சட்டப்படி நீதி கிடைக்கச் செய்வதற்கும் தொடர்ந்து பாடுபடுவதே கொழும்பு மறைவாட்டத்தின் வலுவான விருப்பம் என்று கர்தினால் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |