உச்சக்கட்ட பரபரப்பில் ரணிலின் வழக்கு - நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்
முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வருகை வந்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நாமல், அரசாங்கம் தொடர்ந்து ராஜபக்சக்களைப் பழிவாங்கி வருவதாகவும், இப்போது ரணில் மீது பழிவாங்குவது ஒரு புதிய சூழ்நிலையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கக்கு எதிரான வழக்கு இன்று (26) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 20 வருடங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்த கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில், அவரது உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவது கேள்விக்குறியாகவே உள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை
அவரது உடல்நிலை குறித்து ஐந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவர்கள் குழுவால் நேற்று (25) பிற்பகல் சிறப்பு அறிக்கை ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையில், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை திருப்திகரமான நிலைக்குத் திரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற வேண்டும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால், அவரை மன்றுக்கோ அல்லது வெளியிலோ அழைத்துச் செல்வது கடினம் என்று சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட பயணத்திற்காக அரசு நிதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஓகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 26 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ரணில் அரச தலைவராக இருந்தபோது, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் தனது மனைவிக்கான விழாவில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 2023 இல் ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றது குறித்து விசாரிக்கப்பட்ட பின்னர், "அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக்" கூறப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
தனது மனைவி தனது பயணச் செலவுகளைத் தானே கவனித்துக் கொண்டதாகவும், எந்த அரச நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்றும் விக்ரமசிங்க கூறி வந்தார்.
இருப்பினும், விக்ரமசிங்க தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்தியதாகவும், அவரது மெய்க்காப்பாளர்களுக்கும் அரசு பணம் கொடுத்ததாகவும் சிஐடி குற்றம் சாட்டியது.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவரை ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் முடிவு செய்தார்.
அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை
இந்நிலையில் மற்றொருபுறம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியது போன்ற ஒரு சிறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட போதிலும் அவரது பெரிய குற்றங்களை விசாரிக்க அரசாங்கத்திற்கு தைரியம் இல்லை என பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக அரசாங்கம் உண்மையிலேயே நடவடிக்கை எடுக்க விரும்பினால் பட்டலந்த சித்திரவதைக்கூடம், மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்கள் உள்ளிட்ட மிகக் கடுமையான குற்றங்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

