பழிவாங்கப்படும் விமல் வீரவங்ச! விமல் உட்பட அறுவருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட அறுவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருகைதந்திருந்த போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள விமல் வீரவங்ச, ஜயந்த சமரவீர, மொகமட் முஸம்மில் மற்றும் வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரோஜர் செனவிரத்ன ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருத்தனர்.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கை விசாரிப்பதற்காக மாற்று திகதியை வழங்குமாறு கறுவாத்தோட்ட காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்த நிலையில் கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹுசைன் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கைக்கு பயணம் செய்தபோது விமல் வீரவங்க உள்ளிட்டவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தின் மூலம் மக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக கறுவாத்தோட்டம் காவல்துறையினரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
