புங்குடுதீவில் நீதி கோரி போராடியவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!
படுகொலை செய்யப்பட்ட அற்புதராசா அகிலனின் பூதவுடலை வைத்து வீதியை மறித்து போராடியமைக்கு எதிராக தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் உள்ளிட்ட ஐவர் மீது ஊர்காவற்துறை காவல்துறையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு ஊர்காவற்துறை காவல்துறையினரால் தீவகம் சிவில் சமூகம் அமைப்பின் செயலாளர் மாணிக்கவாசர் இளம்பிறையன் , உப தலைவர் கருணாகரன் குணாளன் , வேலணை பிரதேசசபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் இரு பொதுமக்களின் பெயர் குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 07 ஆம் திகதி ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்ற அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
நீதி கோரி போராட்டம்
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதியன்று வாள்வெட்டு கும்பலின் கொடூரமான தாக்குதலில் பலியான தனியார் பேருந்து உரிமையாளர் ஐயாத்துரை அற்புதராசா என்பவரின் பூதவுடலை குறிகாட்டுவான் பிரதான வீதியில் பெற்றோல் நிரப்பும் நிலையம் முன்பாக நடுவீதியில் வைத்து கொல்லப்பட்டவரின் குடும்ப உறவுகளும் , 150 க்கு மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து போராடியிருந்தனர்.
இப்போராட்டத்திற்கு தீவகம் சிவில் சமூகம், புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு தனியார் பேருந்து சேவை சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் ஆதரவை நல்கியிருந்தன . அன்றைய தினம் புங்குடுதீவு தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பினையும் மேற்கொண்டிருந்தனர்.
ஐந்து கோரிக்கைகள்
குறித்த கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ( SSP) அக்கோரிக்கைகளை இயன்றவரை உடனடியாக நிறைவேற்றுவதாகவும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருமாறும் சாட்சியாக காணொளி ஒளிப்பதிவுக்கு முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், சட்டவிரோத குழுவாக ஒன்று கூடி அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


