குருந்தூர்மலை விவகாரம்:மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு!
குருந்தூர் மலையில் கடந்தவருடம் 2022.09.21 இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களது வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
B1053 /2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (11.12.2023) குறித்த வழக்கு மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்நிலையில் இடம்பெற்றது.
விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.
வழக்கு ஒத்திவைப்பு
வழக்கு விசாரணை நடைபெற்று வழக்கானது 2024 பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் விளைவிக்க கூடாது , குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த வருடம் 2022.09.21 குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அவ் ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் லோகேஸ்வரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர், காவல் நிலையம் வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந் நிலையில் காவல் நிலையம் சென்ற இவர்களை காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |