நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தோல் நோய்
வடமேல் மாகாணத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் நோய், மத்திய மாகாணத்தில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் பதிவாகியுள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கு கால்நடைகளை போக்குவரத்துச் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை நோய்
கண்டி மாவட்டத்தில் இந்தக் கால்நடை நோய் உத்தியோகபூர்வ பிரிவுகளில் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்தார்.
தற்போது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ளை மற்றும் கலேவெல கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, நுவரெலியா மாவட்டத்தில் ராகலை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவு, ஹரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய உடுநுவர குவாட்டல்வ ஆகிய பிரதேசங்களில் கால்நடைகளுக்கு தோல் நோய் பரவி வருகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.
உடனடியாக அறிவிக்கவும்
எவ்வாறாயினும், இது ஒரு வைரஸ் நோய் என்பதால், நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உடனடி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நோய் பதிவாகியுள்ள பிரிவுகளிலிருந்து விலங்குகளை வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
கால்நடைகளின் முதுகில் கட்டிகள் தோன்றுவதன் மூலமும் தோல் நோய்த்தொற்றுகள் மூலமும் இந்நோயை அடையாளம் காண முடியும் எனவும், கால்நடைகள் தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உடனடியாக அறிவிக்குமாறும் மாகாண பணிப்பாளர் திருமதி ராஜநாயகம் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.