பாடசாலை வான்களுக்கு கட்டாயமாக்கப்படும் சி.சி.டி.வி கமரா : அமைச்சர் அறிவிப்பு
பாடசாலை வான்களுக்கு சி.சி.டி.வி கமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் எமது அரசாங்கம் முன்னெடுக்கும்.
வழிகாட்டல் நெறிமுறைகள்
அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயற்படும் மனிதர்கள் தேவை.
ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக இன்னொருவருக்காக முன்வருவதற்கு மக்கள் பயப்படுகிறார்கள்.
அதனால் பேருந்துத் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, முச்சக்கரவண்டித் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, செம்மஞ்சள் நிறம் சிவப்பு (Red) பக்கத்திற்குச் செல்லாமல் பச்சை பக்கத்திற்குக் கொண்டுவர நாங்கள் எடுக்கும் முயற்சி என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |