வாக்கெண்ணும் நிலையங்களில் கமராக்கள் அவசியம் : முக்கிய தமிழ்க் கட்சி விடுத்த கோரிக்கை!
தேர்தல்களின் போது வாக்கெண்ணும் நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதுடன் வாக்களிப்பின் போது இடம்பெறும் இடர்பாடுகளை தடுக்க இலத்திரனியல் வாக்களிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தனினால் தேர்தல் ஆணையாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கோரிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒவ்வொரு தேர்தல்களிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தூய்மையான தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் ஆணையுடன் ஆரோக்கியமான தலைவர்கள், ஆட்சியாளர்கள் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் அர்ப்பணிப்புடன் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டுக்குரியது.
கட்சியின் வேண்டுகோள்கள்
இருப்பினும், ஏதோ ஒரு சூழலில் யாராலோ இழைக்கப்படும் தவறுகள் இந்நிலையில் பாரிய தாக்கத்தினை செலுத்துவதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காக, எமது கட்சியினால் பின்வரும் ஆலோசனைகளும் வேண்டுகோள்களும் முன்வைக்கப்படுகிறன.
வாக்களிப்பின் போது வயோதிபர்கள், விசேட தேவையுடையோர் தொடர்பாக எழுத்திலுள்ள நடைமுறைகள் எந்தளவிற்கு வாக்களிப்பு நிலையங்களில் செயற்படுத்தப்படுகின்றது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம் என்பதுடன் வாக்களிப்பு நிலையங்களை கண்காணிக்கும் யுத்திகளை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்திலோ அல்லது வாக்கெண்ணும் நிலையத்திலோ எந்தவொரு அரசியல் கட்சியுடனோ, அரசியல் பின்புலத்துடனோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தேர்தல் கடமைகளில் அமர்த்துவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இடம்பெற்ற ஊடக மற்றும் அரசியல் முன்னெடுப்பு கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் தொடர்பு உண்டு என தேர்தல் பிரசாரம் முடிவடையும் இறுதி நாளில் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளதாக காவல்துறை பேச்சாளரின் ஊடக அறிவிப்பும் அதனை ஒட்டியதாக ஊடகங்களின் செய்தி வெளியீடுகளும் வாக்களிப்பில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன் அந்த விடயம் தமது கட்சியின் வாக்காளர்களை பெரிதும் குழப்பியிருந்தது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |