விளக்கமறியலில் வைக்கப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர்!
சிறிலங்கா இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே உள்ளிட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட தரப்பினர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டு
மண்ணெண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை வழங்கும் வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை வெளியிடுவதற்காக அதிகார சபையின் தலைவர் இலஞ்சம் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இரண்டு இடைத்தரகர்கள் மூலம் அவர் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதன் போது, குறித்த பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்ட மூவரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணை
இந்த குற்றச்சாட்டு தொடர்பான வழங்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.