சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்த மொட்டு கட்சி : மீண்டும் யாராலும் அழிக்க முடியாதென அறிவிப்பு
அழிவில் இருந்து மீண்டெழுந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவை யாராலும் மீண்டும் அழிக்க முடியாதென கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
தமது கட்சியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கருத்து வெளியிட்டுள்ள பின்னணியிலேயே, கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
அதேநேரம், இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிக்கும் சக்தியாக தமது கட்சி இருக்குமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை அழிக்கும் முயற்சி
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை அழிப்பதற்கு தொடர்ந்தும் பலர் முயற்சித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது, தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லபட்டிருந்ததாக சந்திரசேன நினைவூட்டிள்ளார்.
எவ்வாறாயினும், சாம்பல் மேட்டில் இருந்து மீண்டெழுந்து தற்போது தமது கட்சி அதன் அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
இந்த பின்னணியில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக சிறிலங்கா பொதுஜன பெரமுன திகழும் என சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்களிலும் தமது கட்சி பிரதான பங்கு வகிக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.