கடன் மீட்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் : நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் தொடர்ச்சியான நிலைத்திருப்பினையும் ஊழியர்களின் வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பரேட் செயற்படுத்தல் சட்டம் மற்றும் பிற கடன் மீட்பு சட்டங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பரேட் சட்டத்தினை இடைநிறுத்துவது சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மீட்சிக்கு உதவுமா?" என்ற தலைப்பில் அண்மையில் வலையரங்கம் இடம்பெற்றது அதில் முக்கிய உரையை ஆற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு பரேட் உரிமைகளை இடைநிறுத்துவதற்குப் பதிலாக, கடன் மீட்புச் சட்டங்களுடன் பரேட் செயற்படுத்தல் சட்டத்தை மேலும் வலுப்படுத்துவது நாட்டின் வணிகத்துக்கு அதிக நன்மை பயக்கும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
கடன் மீட்பு
பொறுப்பற்ற ரீதியில் கடனை வாங்கி மீள செலுத்தாதோரை பாதுகாப்பதனை விடுத்து ஒரு நிறுவனத்தையோ அல்லது வணிகத்தையோ பாதுகாப்பது நாட்டில் இயங்குகின்ற வங்கிகளுக்கும் வணிகங்களுக்கும் நன்மையை அளிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
3-6 மாத காலத்துக்குள்ளான கடன் மீட்பு இந்த மாற்றத்தைச் செய்ய உதவும் என்று ஆளுநர் கூறினார்.
தொடர்ந்து எதிர்ப்பு
“மூன்று மாதங்களுக்குள், கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்தை கையகப்படுத்தி, பொருத்தமான வேறு ஒருவர் சொத்தை எடுக்க மத்திய வங்கி அனுமதிக்கிறது, இது பொருளாதாரத்திற்கு உதவுவது மாத்திரமல்லாது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் உதவுகின்றது, மேலும் இது நிதிக்கான அணுகலை மேம்படுத்தும்,” எனவும் அவர் விரிவாகக் கூறினார்.
வணிக சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து அழுத்தங்கள் வழங்கப்பட்டாலும், வங்கிகளின் பரேட் செயற்படுத்தல் உரிமைகளை திருத்துவதற்கான அழைப்புகளை மத்திய வங்கி தொடர்ந்து எதிர்க்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.