தமிழர் பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வு..! திட்டவட்டமாக தெரிவித்த அநுரகுமார
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கான உரிமைகளையும், தீர்வுகளையும் வழங்கியே தீரும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நினைவுகளை தமிழ் மக்கள் அமைதியாகவே நடத்துகின்றனர். அடிப்படை அரசியல் அறிவு அற்றவர்களே இதற்கு எதிராகக் கண்டனங்களை வெளியிடுகின்றனர்.
தமிழினத்தால் தியாகதீபம் என்று போற்றப்படும் திலீபனை வடக்கு கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் பாருமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தலுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
தமிழர்களுக்கான உரிமை
இலங்கை ஒரு ஜனநாயக நாடு இங்கு போரிலோ அல்லது வேறு எச் சந்தர்பத்திலோ உயிரிழந்தவர்களை அவரின் உறவுகள் அல்லது அவர்களின் இனத்தவர்கள் அமைதியாக நினைவேந்த முடியும்.
இதற்கு எதிராக எவரும் கருத்துக்களை வெளியிட முடியாது. தமிழ் மக்களின் நினைவேந்தல் நாட்டில் எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்?
மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரச தரப்பினரும் அதன் நேர்வழி, மறைவழி பங்காளிகளும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு தமிழ் மக்களின் மனதை புண்படுத்தியே வந்தார்கள்.
தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் தீர்வுகளையும் வழங்க எந்த அரசும் முன்வரவில்லை இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்தால் தமிழர்களுக்கான உரிமைகளையும் தீர்வுகளையும் வழங்கியே தீரும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
