இலங்கை பூர்வீகத்தலைவர் பதவிவிலகல்: பிரித்தானிய அதிதீவிர வலதுசாரி கட்சியில் அதிர்வு
பிரித்தானியாவின்(UK) அதி தீவிர வலதுசாரிக்கட்சியான நைஜல் பராஜ்ஜின் றிபோம் யூகே(Reform Uk சீரமைப்பு பிரித்தானியா) கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து இலங்கைப் பூர்வீகத்தைக் கொண்ட முஸ்லிம் தொழிலதிபர் ஜியா யூசுப்(Zia Yusuf) விலகியுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள அதி தீவிர வலதுசாரிக் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இலங்கைபூர்வீகத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைவராக இருக்கும் விடயம் அசாதாரண ஒரு விடயமாக இருந்தது.
1980 களில் இலங்கையிலிருந்து பிரிதானியாவுக்கு குடிபெயர்ந்து அதன் தேசிய சுகாதாரசேவையான என்.எச் எஸ் இல் ஒரு மருத்துவராக பணிபுரிந்த தந்தைக்கும் ஒரு தாதியாக பணிபுரிந்த பெற்றேருக்கும் பிறந்த யூசுப் லண்டனில் ஹம்ப்டன் பாசாலையில் கல்வி பயின்ற பின்னர் தொழிலதிபரானவர். அதன்பின்னர் அவர் றிபோம் யூகே கட்சியில் இணைந்தார்.
பதவி விலகியமைக்கு காரணம்
கடந்த வருடம் தனது வலதுசாரிக்கட்சியை முறையாக கட்டமைக்க விரும்பிய அதன் நிறுவுனர் நைஜல் பராஜ் இவரை தனது கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருத்தினார்.

பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது தடைசெய்யப்பட வேண்டும் என்ற விடயம் தற்போது வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்திய நிலையில் புர்கா தடை குறித்த விடயத்தில் ஜியா யூசுப் வினா எழுப்பியமை அவரது கட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்தியதை அடுத்து அவர் தனது தலைமைப்பொறுபபில் இருந்து விலகியுள்ளார்.
பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க் போன்ற நாடுகளைப்போல பிரித்தானியாவிலும் புர்கா ஆடை தடை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கை தீவிர வலதுசாரிகளால் முன்வைக்கப்பட்டுவருகிறது.
உள்ளூராட்சி தேர்தல்
இந்த நிலையில் அதி தீவிர வலதுசாரிக்கட்சியொன்றுக்கு ஒரு முஸ்லிம் தலைவராக இருப்பதை அதன் உறுப்பினர்கள் விரும்பவில்லை என்ற அடிப்படையில் எழுந்த அழுத்தங்களால் யூசுப் பதவி விலகினார் என விமர்சனங்கள் வந்துள்ளன.

யூசுப் இன் தலைமைத்துவத்தில் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்கு மடங்காக உயர்த்தப்பட்டதுடன் கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களிலும் அது வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை பெற்றிருந்தது.
பிரித்தானியாவில் குடியேறிகளின் வருகையை கட்டுப்படுத்தமுடியாமல் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அரசாங்கம் திணறும் நிலையில் நைஜல் பராஜ்ஜின் கட்சி பிரித்தானிய வாக்காளர்களிடம் அதிக செல்வாக்கை பெற்றுவரும்வதும் சுட்டிக்காட்டத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        