நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த ஒரே தலைவர் கோட்டாபய - நாடாளுமன்ற உறுப்பினர் விசனம்!
நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த ஒரே தலைவர் கோட்டாபய கோட்டாபய ராஜபக்ச என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri ) தெரிவித்துள்ளார்.
தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்தும் அரச தலைவராக முன்நோக்கி செல்ல முடியாது என்று கூறியிருந்தால், இதனை விடக் கௌரவம் கிடைத்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு இராஜினாமா செய்யும் அறிவிப்பை வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்த்தனரே அன்றி, மீதமுள்ள பதவி காலத்தில் இருப்பதை பற்றி கேட்பதற்காக அல்ல.
எவ்வாறாயினும் நிலவும் நெருக்கடிகள் பற்றிப்பேசி, அவற்றை உருவாக்கியது தான் அல்ல என கூறினாலும் அவற்றை உருவாக்கியது தனது சகோதரர் உட்பட அரசாங்கம் என்பதை மறக்கக் கூடாது. நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த ஒரே தலைவர் என்ற நிலையை கோட்டபாய ராஜபக்ச அடைந்து விட்டார்.
அரச தலைவராக கோட்டாபய ராஜபக்ச எடுத்த முடிவுகள், தீர்மானங்கள் காரணமாகவே நாடு நெருக்கடிக்குள் சென்றது. தற்போது அந்த நெருக்கடிக்கான காரணத்தை மக்கள் மீது சுமத்த முயற்சித்தால், கோட்டாபய ராஜபக்ச அரசியல் அனுபவம் பற்றி தனியான விசாரணையை நடத்த நேரிடும் எனவும் சமிந்த விஜேசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
