ஆப்கானை போன்று இலங்கையர்களும் உலக நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிலைமை உருவாகும்! சாணக்கியன் ஆருடம்
ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து மக்கள் வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வதைப் போலவே எதிர்காலத்தில் இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் உட்பட பலரும் உலக நாடுகளுக்குத் தப்பிச்செல்லும் நிலைமை உருவாகலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆருடம் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அமைச்சரவையில் தற்போது மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது சீட்டுக் கட்டு விளையாட்டு நினைவுக்கு வருகின்றது. இதில் கோமாளிகள் இரண்டும் இருக்கும். அந்த இரண்டு கோமாளிகளையும் ஒதுக்கிவிட்டே சீட்டுக்கட்டு பிரிக்கப்படும். அதேபோன்று தான் தற்போது ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி தனது அமைச்சு மாற்றப்பட்டதற்காக ஒப்பாரி வைக்கின்றார்.
அவருக்கே தெரியாது அவரது அமைச்சுப்பதவி பறிபோனதாக தெரிவிக்கின்றார். கோமாளிகளே இவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த நாட்டை ஆட்சி செய்வதும், தீர்மானங்கள் எடுப்பதும் கோமாளிகள் என்றே கூற வேண்டும். அதேபோல் பலி கொடுப்பது குறித்தும் அவர் கதையொன்றை கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து நாட்டு மக்களையே பலிகொடுத்து வருகின்றனர். அதேபோல தற்போது காபூலில் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்வதை நாங்கள் கண்டோம். விமானத்திலிருந்தும் பலர் கீழே விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் இதேபோன்றதொரு ஆட்சி தொடர்ந்தால் எதிர்கலாதில் இலங்கையிலும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் நாட்டை விட்டு தப்பி செல்லும் நிலை உருவாகும்.
ஒருகாலத்தில் இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் மாத்திரமே வெளிநாடுகளில் அடைக்கலம் கோரிச்சென்றனர். எனினும் ஸ்ரீலங்காவில் தற்போதைய அரசாங்கத்தின் பலவீனமான ஆட்சியினால் ஸ்ரீலங்காவிற்கு காபூலில் வந்தது போன்று விமானமொன்று வந்தால் தமிழ் மக்கள் மட்டுமன்றி, சிங்களம், முஸ்லிம் மக்கள்கூட அதில் பயணித்துவிடுவார்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.