குருந்தூர் விகாரை பற்றி சாணக்கியன் பேசுவது வெட்ககேடானது : ஈ.பி.டி.பி. கண்டனம்!
இராசமாணிக்கம் சாணக்கியன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்தபோது கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு இன்று குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுவது வெட்கக்கேடான விடயம் என மட்டு மாவட்ட ஈ.பி.டி.பி. கட்சி ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
ஈபி.டி.பி கட்சியின் வாராந்த ஊடக மாநாடு இன்று (05.11.2025) இடம்பெற்றது.
இதில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
வரிப்பணத்தில் அரசியல்
இன்று உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றி ஆட்சி செய்து வரும் சில பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மக்களுடைய வரிப்பணத்தில் அரசியல் செய்கின்ற ஒரு கேவலமான நிலைக்கு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ இன்று ஆட்சியை கைப்பற்றப்பட்ட பிரதேச சபைகளின் தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலர் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்கள் இருக்கின்றனர் எனவே அவர்களுக்கு எதிராக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.
மட்டக்களப்பு எல்லை கிராமமான கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வடமுனை ஊத்துச்சேனை பகுதியில் உள்ள நெலுகல் மலையில் 2021 ஆம் ஆண்டு நெலுகல் ரஜமல் விகாரை என்ற பெயரில் பாரிய பௌத்த விகாரை ஒன்று புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது எந்த தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதேவேளை சிறிலங்கா சுதந்திர கட்சி பட்டிருப்பு தொகுதி அமைப்பாளராக இருந்த இரா.சாணக்கியன் மட்டக்களப்பு சின்னவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரையில் கட்டிடம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு மட்டு அம்பிட்டிய சுமணரத்ண தேரருடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அழைத்து அடிக்கல் வைத்தார்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு இன்று வவுனியாவில் உள்ள குருந்தூர் மலை விகாரை தொடர்பாக பேசுகின்றனர் இது ஒரு வெட்கக்கேடான விடயம் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட 400 மில்லியன் 100 மில்லியன் உண்மையான அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் இப்போது இரா.சாணக்கியன் புகழ்கின்றார் எதற்காக என தெரியவில்லை? ” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

